Home /pudukkottai /

முந்திரி விற்பனையில் கலக்கும் ஆதனக்கோட்டை ஊர்.. புதுக்கோட்டை சென்றால் இதை மிஸ் செய்யாதீங்க

முந்திரி விற்பனையில் கலக்கும் ஆதனக்கோட்டை ஊர்.. புதுக்கோட்டை சென்றால் இதை மிஸ் செய்யாதீங்க

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள முந்திரி

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள முந்திரி

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் விவசாயிகள் முந்தரி விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
    புதுக்கோட்டை மாவட்டம் பொதுவாகவே வறண்ட பகுதியாக இருந்து வருகிறது. வறண்ட பகுதியிலும் பல்வேறு புதிய முயற்சியில் விவசாயிகள் இறங்கி சாதித்து வருகின்றனர்.

    புதுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் புதுக்கோட்டையில் இருந்து 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஆதனக்கோட்டை கிராமம்.
    ஆதனக்கோட்டையின் வழியாக செல்லும் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் நமக்கு காட்சி தருவது அனைத்தும் முந்திரி பருப்பு கடைகளும், முந்திரிப் பருப்பை பிரித்தெடுக்கும் ஆதனக்கோட்டை மக்களும் தான்.

    மரங்களில் இருந்து பறித்தோ அல்லது மொத்த வியாபாரியிடம் இருந்து மூட்டைகளாகவோ பச்சை முந்திரிக் கொட்டைகளை வாங்கும் விவசாயிகள், அவற்றை சட்டியில் போட்டு வறுத்து எடுத்து அதற்கே உரிய முறையில் அவற்றை உடைத்து எடுத்து பருப்புகளை பாக்கெட்டுகளில் போட்டு விற்பனை செய்கின்றனர்.

    விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள முந்திரி


     

    ஒரு கிலோ பாக்கெட்டுகள், அரை கிலோ பாக்கெட்டுகள், கால் கிலோ பாக்கெட்டுகள் மற்றும் 50 கிராம் பாக்கெட்டுகள் வரை கிடைக்கின்றன. சில்லறையாக விற்பனை செய்வது பயணிகளை கவர மட்டும்தானே தவிர்த்து முழு நேரமாக தஞ்சை, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மொத்த வியாபாரிகளிடம் முந்திரிப் பருப்புகளை விற்று விடுகின்றனராம் அப்பகுதி வியாபாரிகள்.

    விற்பனைக்காக வைக்கப்படும் முந்திரி


    பச்சை முந்திரிக் கொட்டை 81 கிலோ மூட்டைகளாக வாங்கும் விவசாயிகளுக்கு தை மாதம் முதல் சித்திரை மாதம் வரையிலான மாதம் தான் முந்திரிப் பழ சீசன் என்பதால், அந்த நேரங்களில் பச்சை முந்திரி 81 கிலோ மூட்டை 7,000 முதல் 7,500 ரூபாய் வரை கிடைப்பதாகவும், சீசன் இல்லாத சாதாரண நாட்களில் 81 கிலோ மூட்டை 10,000 ரூபாயைத் தாண்டுகிறதாம்.

    முந்திரியை பிரித்தெடுக்கும் பெண்


    81 கிலோ மூட்டை பச்சை முந்திரிக் கொட்டையை வறுத்து பருப்பாக மாற்றினால் 17-19 கிலோ முந்திரிப் பருப்பு தான் கிடைக்கிறதாம்.
    ஆனாலும், இந்த தொழில் ஓரளவு லாபகரமானதாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள். இந்த தொழிலை செய்வதற்கும், விற்பதற்கும் அரசிடம் உரிமம் பெற வேண்டி இருப்பதால், ஆதனக்கோட்டையில் மட்டும் 110க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உரிமத்துடன் இருக்கின்றனர்.

    சாலையோரமாக அடுப்பில் வறுக்கப்படும் முந்திரி


    பலரும் சாலைகளில் கடைகள் வைத்து வியாபாரம் செய்தாலும், சிலர் வீட்டிலேயே பருப்பை பிரித்தெடுத்து நேரடியாக தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் விற்று விடுகின்றனர்.

    மொத்த வியாபாரிகளிடம் கிலோ முந்திரிப் பருப்பை 740 ரூபாய்க்கு கொடுக்கும் வியாபாரிகள், உழைப்பு மற்றும் லாபம் கருதி சில்லரையாக கடைகளில் விற்கும் போது மட்டும் கிலோ முந்திரி பருப்பு 800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. மத்திய அரசிலிருந்தும் மாநில அரசிலிருத்தும் உரிய உதவிகள் அவ்வப்போது கிடைக்கப் பெற்று, தொழிலை எளிமையாக்க பருப்பு பிரித்தெடுக்கும் இயந்திரம் உள்ளிட்டவற்றை மானியத் தொகையில் வழங்கவும் வியாபாரிகக் கோரிக்கை வைக்கின்றனர்.

    இனிவரும் காலங்களில், ஆதனக்கோட்டை வழியாக பயணிக்க வாய்ப்பு இருப்பவர்கள் ருசியான முறுவலான முந்திரியை சுவைத்தவாரே பயணிக்கலாம்.

    செய்தியாளர்: துர்கா மகேஸ்வரன், புதுக்கோட்டை.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி