கோயில்களில் திருப்பணிக்காகவும், சேவைக்காகவும் சிறுவயதிலேயே நேர்ந்து விடப்பட்ட பெண்கள் தேவதாசிகள் அல்லது தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டனர். கோயில் பணியாளர்களாக இருந்த இவர்கள் ஆடல், பாடல் கலைகளில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தனர். மேலும் திருவிழாக்களின்போது, கடவுளை வழிபட்டு, சதிராட்டம் ஆடி பக்தர்களை மகிழ்வித்தனர்.
கடைசி வாரிசு :
அந்த வகையில் விராலிமலை சுப்பிரமணியசாமி கோயிலில், முருகப்பெருமானுக்கு, பொட்டுக்கட்டி விடப்பட்டவர் தான் முத்துக்கண்ணம்மாள். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அங்கீகரிக்கப்பட்ட 32 தேவரடியார்களில் ஒருவராக இருந்தவர், இன்று தேவதாசி மரபின் கடைசி வாரிசாக எஞ்சி நிற்கிறார்.
சதிராட்டக் குடும்பம் :
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைப் பூர்வீகமாகக் கொண்ட முத்துக்கண்ணம்மாளுக்குக் கலைப் பிரிவில், மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து பேசிய முத்துக்கண்ணம்மாள், “விராலிமலைதான் எனக்கு சொந்த ஊர். எங்க குடும்பமே சதிராட்டக் குடும்பம். அப்பா ராமச்சந்திரன் நட்டுவனார்கிட்ட இருந்துதான் முறைப்படி சதிராட்டத்தைக் கத்துக்கிட்டேன். அவர்தான் என் குருவும்கூட.
விராலிமலையைப் பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் எங்க குடும்பம்தான் சதிர் ஆடும். எனக்கு 7 வயசு இருக்கும்போதே சதிர் ஆட வந்திட்டேன். 7 வயசு இருக்கும்போதே விராலிமலை முருகனுக்குப் பொட்டுக்கட்டி விட்டுட்டாங்க. அந்த நேரத்துல என்னோட சேர்த்து மொத்தம் 32 பேர் கோயிலுக்கு சேவை செஞ்சிட்டிருந்தோம். 32 பேருக்கும் சதிர் சொல்லிக்கொடுத்தது எங்க அப்பாதான்.
இருவேளையும் 400 படிகள் :
தினமும் காலை, மாலை இருவேளையும் 400 படிகள் ஏறி, இறங்கி சுப்பிரமணியசுவாமியை வணங்கிப் பாடல் பாடி, சதிர் நடனம் ஆடுவதுதான் எங்களோட பணி. கோயில் திருவிழாக்களில் நாங்க சதிர் ஆடுவோம். அப்பவெல்லாம் இப்ப மாதிரி லைட்டெல்லாம் கிடையாது. விட்டி, பெட்டர்மாஸ் லைட்தான். ஆனால், சதிர், கும்மி, கோலாட்டம் பார்க்க அவ்வளவு அருமையா இருக்கும்.
32 பேர் சதிராடுவோம் :
அப்போ விராலிமலை கோயிலை நிர்வகிச்சிக்கிட்டு இருந்த புதுக்கோட்டை மகாராஜா ராஜகோபால தொண்டைமான்தான் எங்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும், சலுகைகளையும் செஞ்சி கொடுத்தாரு. நாங்க 32 பேரும் சதிராடுவோம். அப்பவெல்லாம் எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை. ரொம்ப நல்லா வாழ்ந்தோம். ஊரே எங்களைக் கொண்டாடும்.
ரொம்ப நுணுக்கமா ஆடணும் :
சதிர் ஆட்டத்தைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப நுணுக்கமா, பாடிக்கிட்டே, ஆடணும். எங்கள் ஆட்டத்தைப் பார்க்க பெரிய கூட்டமே சேரும். எங்களோட சதிர் ஆட்டம்தான், இப்போ பரத நாட்டியமா மாறிப்போயிருக்கு. சுதந்திரம் வந்ததுக்கு அப்புறம் தான் எங்க வாழ்க்கையும் ரொம்பவே மாறிப்போயிடுச்சு. கோயில்ல சதிர் ஆடக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. மகாராஜாவோட ஆட்சியும் முடிவுக்கு வந்திடுச்சு.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கோயிலில் ஆடுவதில்லை :
அதற்கப்புறம் கோயில்ல நாங்க சதிர் ஆடுறதில்லை. ஒண்ணு, ரெண்டு பேர் இந்த கலை பத்தித் தெரிஞ்சிக்கிட்டு என்னை அணுகுறாங்க. அவங்களுக்கு கத்துக்கொடுக்கிறேன். நடிகை சொர்ணமால்யாவுக்கு கற்றுக்கொடுத்தேன். கர்நாடகாவை சேர்ந்த சிலர் என்னிடம் வந்து இக்கலையை கற்றுக்கொண்டனர்” என்றார். தான் கற்ற கலையை வளர்த்தெடுக்க அடுத்த வாரிசு இல்லையே என்ற வருத்தம் அவரது கண்களில் தெரிந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai