புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை வடக்கு வீதியில் அமைந்துள்ளது மரம் அறக்கட்டளை. இங்கு இலவசமாக மரக்கன்றுகள் தேவைபடுவோருக்கு வழங்கி சமூக சேவையாற்றி வருகிறார் இயற்கை மீது பெருங்காதல் கொண்ட மரம் ராஜா.
பொது வளாகங்கள், மருத்துவமனை வளாகங்கள், கல்வி நிலைய வளாகங்கள், விளையாட்டு திடல்கள், ஏரி, குளம், கண்மாய் கரைகள், ஆலய வளாகங்கள் மற்றும் சாலையின் இருபுறங்கள் என புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் இவர் நட்ட மரங்களாகவே இருக்கின்றன.
இவரின் இந்த சேவயை மாவட்ட நிர்வாகம் பாராட்டி விருதும் வழங்கியுள்ளது.. யார் இவர்? ஏன் இதை செய்கிறார்? என்று அறிய அவரது பண்ணைக்கு ஒரு விசிட் அடித்தோம்.
எங்கு திரும்பினாலும் மரக்கன்றுகள் தெரிகின்றன. பல லட்சக்கணக்கான மரக்கன்றுகள் இங்கு உற்பத்தி செய்யப்படுவதை காணமுடிகிறது.
முக்கால் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நாற்றுப் பண்ணையில், கன்றுகள் உற்பத்தி நடவு பராமரிப்பு உள்ளிட்டவைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை நம்மால் காண முடிகிறது. உற்பத்தி செய்யப்படும் கன்றுகள் ஆரோக்கியமாக உள்ளதா என பார்வையிட்டு வருகிறார் மரம் ராஜா.
மரக்கன்றுகளை குழந்தைகள் என்று அவர் சொல்லுவார் அவரிடம் அப்படி தான் நீங்கள் பேச வேண்டும் என்று அங்கிருந்த விவசாயி ஒருவர் சொல்ல அதை நாம் மனதில் ஏற்றிக்கொண்டோம். மரம் ராஜா சற்று இளைப்பாற தொடங்கியபோது அவரை சென்று சந்தித்து நம் கேள்விகளை கேட்க தொடங்கினோம்.
முதலில் இதை எல்லாம் செய்ய என்ன நோக்கம்? என்று கேட்டோம் பேசத்தொடங்கினார் மரம் ராஜா, “நாம் வாழ்வதற்கான அனைத்தையும் இந்த பூமித்தாய் கொடுக்கிறது. அதற்காக கடனை கொஞ்சம் திருப்பி செலுத்த வேண்டும் என்று நான் நினைத்தேன் அப்படி வந்தது தான் இந்த பழக்கம்.
புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 7,000 மரம் குழைந்தகள், புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு இடங்களில் சாலையின் இருபுறங்களிலும் அதிகளவிலான மரக் குழந்தைகளை நடவு செய்துள்ளேன், அதேபோல் புதுக்கோட்டை மாவட்ட மட்டுமல்ல திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் 4000, மற்றும் அரியலூர் சிவகங்கை போன்ற மாவட்டங்களிலும் சென்று மரக்குழந்தைகளை நடவு செய்துள்ளேன். 4 வருடங்களுக்கு மேலாக 4 லட்சம் மரக் குழந்தைகளை பூமித்தாயின் மடி அமர்த்தி கொடுத்துள்ளேன்” என்கிறார்.
இதையும் படிங்க : நீங்க வரவேண்டாம்; நான் வரேன்.. புதுக்கோட்டை ஆட்சியரின் செயலால் குவியும் பாராட்டு!
மேலும் “அரிய வகை மர செடிகளை அடுத்த தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் என்று மந்தாரை, திருவோடு, சீயக்காய், நாகலிங்கம், இலுப்பை, மஞ்சியம், பெருங்காயம், சிவப்பு பலா, மங்குஸ்தான், பட்டை, சொர்க்கம் மரக்குழந்தைகளை உற்பத்தி செய்து மக்களுக்கு தருகிறேன்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அன்போடு நாய், பூனை, வளர்ப்பு மீன் வளர்ப்பு முதலியவற்றை சொல்லிக் கொடுப்பதை விட மரம் வளர்ப்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் இயற்கை காக்க ஒரு அடி ஏனும் எடுத்த வைக்க முயல வேண்டும்” என்றும் பெற்றோர்களுக்கு கோரிக்கை வைத்தார்.
இந்த மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய ஒரு ரூபாய் கூட யாரிடமும் வாங்காமல் தனது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை குடும்பத்திற்காகவும் இரண்டு பங்கை நாற்றுப் பண்ணைக்காக செலவிடுகிறார் மரம் ராஜா.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தான் செய்யும் இந்த பணியை ஒரு சேவையா நினைக்கவில்லை என்றும் அதை தன் கடமையாக செய்து வருவதாகவும் தெரிவித்தார் மரம் ராஜா. சத்தமில்லாமல் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கிவரும் போற்றப்படாதா கதாநாயகர்களுக்கு ஒரு சல்யூட்.
செய்தியாளர் : சினேகா விஜயன் - புதுக்கோட்டை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai