புதுக்கோட்டை மாவட்டத்தில் காதணி விழாவிற்கு மயிலாட்டம், கரகாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், செண்டை மேளங்கள் என பாரம்பரிய கலைகளோடு 101 வகையான தட்டுத் தாம்புலங்களில் சீர்வரிசையோடு வருகை தந்து தாய்மாமன்கள் அசத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த ஆஸ்திரேலியா குமார் என்பவரது மூன்று குழந்தைகளுக்கும் இன்று நெடுவாசல் கிழக்கு சிவன் கோவிலில் காதுகுத்து விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்த குழந்தைகள், தாய்மாமன்கள் நாட்டியக் குதிரைகள் நடனமாட அதன்மீது அமர்ந்தவாறு வந்தனர்.
மேலும், பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் மற்றும் செண்டை மேளங்கள் என பலத்த ஆரவாரத்தோடு 101 தட்டுகளில் தங்க நகைகள், பழங்கள், ஆடைகள் என பாரம்பரிய முறைப்படி சீர்வரிசைகளை சுமந்து நெடுவாசல் கடைவீதியில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
சீர்வரிசைகளோடு வந்த தாய்மாமன்களை விழாதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தனம் கொடுத்து மாலை அணிவித்து வரவேற்றனர்.
மேலும், இந்த விழாவிற்கு இஸ்லாமிய மக்களும் சீர்வரிசைத் தட்டுகளை சுமந்து வந்து பங்கேற்றனர். அவர்களை நெடுவாசல் கிராம மக்கள் சந்தனமிட்டு வரவேற்று உபசரித்தனர்.
இதனையடுத்து, காதணிசெல்வங்களுக்கு காதணி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து விழாவிற்கு வந்திருந்த இஸ்லாமிய மக்கள் சீர்வரிசையாக நகைகளை காதணிச் செல்வங்களுக்கு அணிவித்து மகிழ்ந்தனர்.
நாகரீகம் பெருகி உறவுகளை மறந்து வரும் காலத்திலும், தொன்மை மாறாமல் பாரம்பரிய முறைப்படி ஆட்டம் பாட்டத்துடன் செண்டை மேளங்கள் முழங்க சீர்வரிசை கொண்டு வரும் தாய்மாமன்களும், சாதி, மத பேதமின்றி இஸ்லாமியர்களும் சீர்வரிசைகளோடு இந்து விழாவில் கலந்து கொள்வதும் தங்கள் பகுதியின் அடையாளமாக நீடித்திருக்கின்றது என பெருமிதத்துடன் தெரிவித்து வருகின்றனர் நெடுவாசல் சுற்றுவட்டார கிராம மக்கள்.
செய்தியாளர்: துர்கா மகேஸ்வரன், புதுக்கோட்டை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai