ஹோம் /புதுக்கோட்டை /

Pudukkottai News : புதுக்கோட்டை இடையப்பட்டி.. அழகிய கிராமங்களை தேடி தொடரும் பயணம்..

Pudukkottai News : புதுக்கோட்டை இடையப்பட்டி.. அழகிய கிராமங்களை தேடி தொடரும் பயணம்..

X
வேட்டார்

வேட்டார் கோவில் இடையப்பட்டி

Pudukkottai District News | புதுக்கோட்டையிலிருந்து 47 கிலோமீட்டர் தொலைவில் விராலிமலை தாலுகாவில் உள்ளது வேட்டார் கோவில் இடைப்பட்டி கிராமம். அழகான பசுமை நிறைந்த வயல் வெளிகள் அதற்கு இடையே உள்ள குன்றுகள் என அமைதியாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறது

மேலும் படிக்கவும் ...
  • Local18
  • 3 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai

அழகிய கிராமங்களை தேடி தொடரும் பயணம் - இந்த வாரம் புதுக்கோட்டையில் இருக்கும் வேட்டார் கோவில் இடையப்பட்டி.

இந்தியாவின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிப்பது கிராமங்கள் தான். கிராமங்களில் நவீனங்கள் புகுந்தாலும் எளிமையும், பழமையையும், அமைதியையும், அழகையும் இன்னும் அவை தொலைத்து விடவில்லை. பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ள நமக்கு கிடைத்த தாய்மடி தான் கிராமங்கள். இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களை கண்முன் கொண்டு வருவதே நியூஸ் 18 உள்ளூர் செய்தியின் ஒரு சிறிய முயற்சி ஆகும். அழகிய கிராமங்கள் தேடி தேடி தொடரும் பயணம்.

புதுக்கோட்டையிலிருந்து 47 கிலோமீட்டர் தொலைவில் விராலிமலை தாலுகாவில் உள்ளது வேட்டார் கோவில் இடைப்பட்டி கிராமம். அழகான பசுமை நிறைந்த வயல் வெளிகள் அதற்கு இடையே உள்ள குன்றுகள் என அமைதியாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறது இந்த கிராமம். இங்கு 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தான் இந்த கிராம மக்களின் பிரதான தொழில்.

கோவில்கள் மற்றும் திருவிழாக்களுக்கு மிகவும் பெயர் பெற்றதாக விளங்குகிறது இந்த கிராமம். வீரத்துடனும் கம்பீரத்துடனும் வேட்டார் கோவில் இருப்பதால் இந்த ஊருக்கு ”வேட்டார் கோவில் இடையப்பட்டி” என்ற பெயர் பெற்றதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

முத்துமாரி அம்மன் கோவில், பிள்ளையார் கோவில், வேட்டார் கருப்பு பெரிய காண்டி அம்மன் கோவில், பட்டவன் கோவில், திருப்பாஞ்சலி அம்மன் கோவில், வடுகச்சி அம்மன் கோவில், என சிறப்பு வாய்ந்த கோவில்கள் இங்கு பல உள்ளன. இந்த கிராமத்தில் திருவிழா என்று வந்துவிட்டால் போதும் கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஒன்று திரண்டு திருவிழாவை ஒற்றுமையுடன் சிறப்பாக கொண்டாடி மகிழ்வதாக கூறுகின்றனர் கிராம மக்கள். அம்மனுக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், பால்குடம் எடுத்தல், படுகளம் போன்ற விழாக்களும் வெகு விமர்சையாக இங்கு கொண்டாடப்படுகின்றன.

பருத்தி, கடலை, சோளம், கம்பு, ஆகியவை இங்கு பயிரிடப்படுகின்றன. பிரதான பயிராக நெல் சாகுபடியே இருக்கிறது. இந்த கிராமத்தில் தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், பொது விநியோக மையம், தண்ணீர் வசதி என அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளது.

ALSO READ | ஐஜி பெயரை சொல்லி ரூ.4.50 லட்சம் மோசடி..! கையும் களவுமாக பிடிப்பட்ட ஆசாமி..!

பாறைக்களம் என்று ஒரு பழைமையான பாறை பகுதி ஒன்று இந்த கிராமத்தில் காணப்படுகிறது. அது விவசாய நிலங்களுக்கு சற்று அருகில் உள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை காயவைக்க முன்னொரு காலத்தில் இந்த இடம் பயன்பட்டதாக தெரிகிறது.பாறையில் ஆங்காங்கே தடங்கள் இன்றும் காணப்படுகின்றது. பாறையின் ஒரு பகுதியில் விராலிமலை முருகன் கோவிலுக்கு செல்ல சுரங்க பாதை இருந்ததாகவும் செவிவழிச்செய்திகள் கூறுகின்றன. தற்போதும் இந்த இடத்தை நெல்லை காய வைப்பதற்கும், இடித்து தூற்றுவதற்கும் பயன்படுத்திவருகிறார்கள் இந்த கிராமத்தினர்.

காலை சூரிய உதயத்திற்கு முன்னரே தங்கள் அன்றாடப்பணிகளை தொடங்கி விடுகிறார்கள் இந்த மக்கள். பெண்கள் அன்றைய தினத்திற்கான சமயலையும் ஆண்கள் கால்நடைகளை முதலில் பராமரிக்கின்றனர். பின்னர் தோட்டத்து வேலைகளுக்கு செல்ல ஆயத்தமாகின்றனர்.

கிராம மக்களிடம் அரசாங்கத்திற்கு ஏதேனும் கோரிக்கைகள் உள்ளதா? என கேட்டபோது ”தங்களுக்கு அனைத்து வசதிகளும் சிறப்பாக கிடைத்துள்ளதாகவும் கேட்டவுடனே அடிப்படைத் தேவைகளை ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் நிறைவேற்றி தருவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். போக்குவரத்திற்கு மட்டுமே சிரமப்படும் நிலையில் உள்ளோம். இரண்டு சக்கர வாகனஙகள் இருந்தால் எளிதில் கிராமத்திற்கு வந்து செல்ல முடியும் ஆனால் பேருந்திற்கு காத்திருக்கும் நிலை இருப்பதாக” தெரிவித்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர் திரு.பிச்சை கண்ணு அவர்கள் நியூஸ் 18 உள்ளூர் செய்திக்காக அளித்த பிரத்யேக பேட்டியில் “பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் தற்போது இயக்கப்படுகின்றன. ஆனால் அதை அதிகரித்து இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படும் என்று கூறினார்.

ALSO READ | 10 ரூபாய் முதல் செடிகள் வாங்கலாம்.. குடுமியான்மலை அருகில் ஒரு அசத்தல் நர்சரி..

மேலும் கிராம மேம்பாட்டிற்காக பல திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அதில் சிலவற்றுக்கு தற்போது செயல் வடிவம் கொடுத்துள்ளதாகவும் கூறினார். இந்த ஊராட்சியை தமிழ்நாட்டின் முன்மாதிரி ஊராட்சியாக ஆக்குவதில்தான் தன் ஈடுபாடு முழுவதையும் செலுத்துவதாகவும், நிச்சயமாக முன்மாதிரி ஊராட்சியாக இனி வரும் காலத்தில் இந்த ஊராட்சி திகழும் ” என்று நம்பிக்கையுடன் பேசினார்.

அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, வேட்டார் கோவில் இடையப்பட்டி கிராமத்தில் இருந்து புறப்பட்டோம், ஆராவாரமில்லாமல் அமைதியாய் இருக்கும் அடுத்த கிராமத்தை நோக்கி பயணிக்க தொடங்கினோம்.

செய்தியாளர்: சினேஹா விஜயன், புதுக்கோட்டை.

First published:

Tags: Local News, Pudukkottai, Temple, Village