அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் தமிழக மக்களின் மேம்பாட்டுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தமிழக அரசின் மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டம் பற்றி விளக்கம் அளிக்கிறார் புதுக்கோட்டை மாவட்ட மாவட்டம் விராலிமலை மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் விராலிமலை வட்டார இயக்க மேலாளர் அழகு மீனா.
இதுகுறித்து பேசிய அவர், “தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தமிழ்நாட்டின் 36 மாவட்டங்களில் 388 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றுள் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழக ஊரக புத்தாக்க திட்டம் 120 வட்டாரங்களும் மற்றும் தேசிய ஊரக பொருளாதார புத்தாக்க திட்டம் செயல்படும் 5 மாவட்டங்களில் உள்ள 20 வட்டாரங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2012ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக ஏழை மக்களுக்கு வலுவான மற்றும் துடிப்பான சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி வாழ்வாதாரத்தை உயர்த்த நிதி மற்றும் பல்வேறு சேவைகளை முறையாக பெற வழிவகை செய்து குடும்ப வருமானத்தை பெருக்குவதே இதன் நோக்கம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் சமுதாயத்தில் உள்ள ஏழைகள், நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோரே இந்த திட்டத்தின் பயனாளிகள்.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
மிகவும் ஏழைகள் நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிடம் சிறப்பு கவனம் செலுத்துதல். விடுபட்ட ஏழை மக்களை கண்டறிந்து அவர்களை சுய உதவி குழுவின் மூலம் ஒருங்கிணைத்தல். ஊரக பகுதிகளில் ஏழை மக்களின் வளர்ச்சிக்கு சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி வலுப்படுத்துதல். சமூக மேம்பாட்டிற்கான திறன் வளர்ப்பு பயிற்சிகளின் மூலம் ஊரக ஏழை மக்களை மேம்பாடு அடைய செய்தல்.
சுய உதவி குழு உற்பத்தி பொருட்களின் தரத்தினை மேம்படுத்தி சந்தைப்படுத்துதல் எளிதாக்குதல். சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களுக்கு கடன் வழங்கும் பொருட்டு குழுக்களுக்கு நிதி உதவி வழங்குதல். ஊரக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாடு பயிற்சி அளித்தல். அரசு துறைகள் மூலம் கிடைக்கப்பெறும் பல்வேறு நிதி மற்றும் நிதி சாரா சேவைகளை ஒருங்கிணைத்து திறம்பட பயன்படுத்த வழிவகை செய்தல்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கிராமப்புற ஏழை மக்கள் அனைவரும் அடிப்படை வசதிகளை பெறக்கூடிய வாய்ப்புகளை உருவாக்குதல் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான பயிற்சிகள் வழங்குதல் ஆகியவை இந்த திட்டத்தின் செயல்பாடுகளாக இருக்கிறது. ஏழை மக்கள் பொருளாதார மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு அடைய அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்தியுள்ளன. ஆனால் அவை குறித்த குறித்த விழிப்புணர்வு நம்மில் இல்லை. எனவே இது போன்ற திட்டங்கள் சரியாக மக்களிடம் சென்று சேர்வதில்லை” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai