முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ரத்த சோகை.. 

புதுக்கோட்டையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ரத்த சோகை.. 

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Pudukkottai District News : புதுக்கோட்டையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இரத்த சோகை.. மீண்டும் வருவது குறித்து அரசு மருத்துவர் அறிவுரை.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்களை விட பெண்கள் மற்றும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ரத்த சோகை. இதில் இருந்து மீண்டு வரும் வழிகள் பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

ரத்த சோகை என்பது ரத்தத்தில் சிகப்பு ரத்த அணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதை குறிக்கிறது. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனை தசைகளுக்கு சுமந்து செல்கிறது. ஒருவேளை ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலோ, ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலோ தசைகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் திறன் ரத்தத்துக்குக் குறையும்.

இதனால் உடற்சோர்வு, வலிமையின்மை, மயக்க உணர்வு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவை உண்டாகும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அதிக அளவில் ரத்த சோகை உள்ளதாக இந்திய சுகாதார துறையுடன் இணைந்து தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு 44.9 சதவீதமும், கர்ப்பிணி பெண்களுக்கு 40 சதவீதமும், பெண்களுக்கு 54.7 சதவீதமும், ஆண்களுக்கு 21.5 சதவீதமும் ரத்த சோகை உள்ளதாக ஆய்வின் முடிவில் வெளியான தகவல் கூறுகிறது.

இதையும் படிங்க : அழகிய கிராமங்களை தேடி தொடரும் பயணம்... இந்த வாரம் புதுக்கோட்டை கொடும்பாளூர் சத்திரம்...

இரும்புச் சத்து பற்றாக்குறையால் பெரும்பாலும் ரத்த சோகை உண்டாகிறது. மலேரியா, காசநோய், ஹெச்.ஐ.வி, ஒட்டுண்ணிகளால் உண்டாகும் நோய்கள், மரபணு ரீதியாக வரும் நோய்களாலும் ரத்த சோகையை உண்டாக்கும்.

ரத்த சோகை நோயை தடுப்பது பற்றி புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் கிராம ஆரம்ப சுகாதார மருத்துவர் ராணியிடம் நியூஸ் 18 உள்ளூர் செய்தி தளம் பிரத்தியேகமாக பேசியபோது அவர் “ரத்த சோகையின் அறிகுறிகளாக படபடப்பு, மயக்கம் சோர்வு, சுறுசுறுப்பு இல்லாமல் இருத்தல், மந்தமான மனநிலையுடன் இருத்தல் போன்றவை நிகழும்.

குழந்தைகளுக்கு கை, முகம் வெளுத்தல், கண்வெளுத்தல், நகம் வெளுத்து காட்சியளித்தல் போன்றவை ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்வது நன்று.

அதேபோல் கீரைகள், பேரிச்சம் பழம், பால், இறைச்சி, உலர் திராட்சை போன்ற உணவுகளில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. இந்த உணவுகளை உண்ணும்போது ரத்த சோகையில் இருந்து மீண்டு வர முடியும். கீரைகள், மீன், இறைச்சி போன்றவற்றை உண்ணும்போது அவற்றுடன் எலுமிச்சை, நெல்லி போன்ற விட்டமின் - சி போன்ற உணவுகளை உட்கொண்டால், நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்து உடலால் அதிகம் உறிஞ்சப்படும்.

மேலும் தற்போது அனைத்து அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு உள்ள ரத்த சோகையை போக்க 1 முதல் 5 வரை உள்ள குழந்தைகளுக்கு அயன் சிரப் வழங்கப்படுகிறது. அதேபோல் மாணவ, மாணவிகளுக்கு திங்கள் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் அயன் போலிக் ஆசிட் மாத்திரைகள் பள்ளியில் வழங்கப்படுகிறது.

மேலும் அனைத்து கிராமங்களிலும் 6 மாதத்திற்கு ஒரு முறை கிராமத்தில் அங்கன்வாடியில் இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு 4 மாதத்தில் இருந்து 6 மாதம் வரையிலும் குழந்தை பிறப்பிற்கு பின் 4 மாதத்தில் இருந்து 6 மாதத்திற்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது” என்று கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நல்ல உணவு பழக்கங்கள் மற்றும் அரசின் மூலம் வழங்கப்படும் மாத்திரைகள் ஆகியவற்றை சரியாக உட்கொண்டு மருத்துவரின் அறிவுரை பின்பற்றினால் ரத்த சோகையிலிருந்து எளிதில் மீண்டு வர முடியும்.

top videos

    புதுக்கோட்டை செய்தியாளர் - சினேகா விஜயன்

    First published:

    Tags: Local News, Pudukkottai