ஹோம் /புதுக்கோட்டை /

குடிநீர், கழிவறை.. அடிப்படை வசதிகளின்றி ஆலங்குடி பேருந்து நிலையம் - தவிக்கும் பொதுமக்கள்

குடிநீர், கழிவறை.. அடிப்படை வசதிகளின்றி ஆலங்குடி பேருந்து நிலையம் - தவிக்கும் பொதுமக்கள்

ஆலங்குடி பேருந்து நிலையம்

ஆலங்குடி பேருந்து நிலையம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேருந்து நிலையத்தை புதுப்பித்து முறையாக பராமரிக்கவும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவும் ஆலங்குடி பகுதி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சிறப்புநிலை பேரூராட்சி மாவட்டத்தின் முக்கிய ஊர்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. புதுக்கோட்டை-பட்டுக்கோட்டே மற்றும் புதுக்கோட்டை - பேராவூரணி நெடுஞ்சாலைகளின் மீது அமைந்துள்ளது. அது மட்டுமின்றி ஆலங்குடி பேரூராட்சியில் தான் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம், ஆலங்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களும், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமும் உள்ளன.

இதனால் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆலங்குடி நகருக்கு வந்து செல்கின்றனர். இந்த சூழ்நிலையில், ஆலங்குடி பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படாமல் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. குடிநீருக்கு நிரந்தரமாக ஏற்பாடு செய்யாமல் தற்காலிகமாக வைக்கப்பட்ட குடிநீர் ட்ரம்மையும் தற்போது யாரும் கண்டு கொள்வதில்லை என குற்றம்சாட்டுகின்றனர் பொதுமக்கள்.

பேருந்து நிலையத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட கழிப்பறையோ பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டியே இருக்கிறது. பேருந்து நிலையத்தின் முன்னர் அமைக்கப்பட்ட ரவுண்டானாவும் ஆண்டுகள் பல ஆகியும் புதுப்பிக்கப்படாமல் வெளிர் நிறத்தில் காட்சி தருகிறது.

ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி, ஆலங்குடி வட்டம், ஆலங்குடி காவல் உட்கோட்டம் என பல முக்கிய அரசு பிரிவுகளின் தலைமையிடமாக விளங்கும் ஆலங்குடி பேருந்து நிலையத்திற்கு ஒரு பெயர் பலகை கூட இல்லை என்பதையும் சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவிக்கின்றனர் ஆலங்குடி பொதுமக்கள்.

ஆலங்குடி பேருந்து நிலையத்தை ஒட்டியவாரே தான் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்களும் உள்ளன.

ஆனாலும் எந்த அதிகாரிகளும், பேரூராட்சி நிர்வாகமும் பேருந்து நிலையத்தின் அவல நிலை குறித்து கவலை கொள்வதில்லை என்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் வந்து போகும் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அமர போதுமான இருக்கைகள் கூட இல்லை.

ஆலங்குடி பேருந்து நிலையத்திற்கு உரிய அங்கீகாரம் அளித்து புதுப்பித்து அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் என்பது மாவட்ட நிர்வாகத்திற்கும் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.

செய்தியாளர்: துர்கா மகேஸ்வரன், புதுக்கோட்டை.

First published:

Tags: Local News, Pudukkottai