Home /pudukkottai /

டீ கடை வருமானத்தில் எளியோர்க்கு உதவும் உயர்ந்த உள்ளம்- புதுக்கோட்டையில் முன்னுதாரமாக திகழும் மனிதர்

டீ கடை வருமானத்தில் எளியோர்க்கு உதவும் உயர்ந்த உள்ளம்- புதுக்கோட்டையில் முன்னுதாரமாக திகழும் மனிதர்

புதுக்கோட்டை டீ கடை நடத்தும் நபர்

புதுக்கோட்டை டீ கடை நடத்தும் நபர்

புதுக்கோட்டையில் டீ கடை வைத்து நடத்திவரும் நபர் சமூக சேவை செய்வதென்று அவரது வாழ்வை அர்பணித்துள்ளார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
    பாதிக்கப்படவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதில் முன்னோடியாக செயல்பட்டு அசத்தும் டீக்கடைக்காரர். மொய் விருந்து நடத்தி வெள்ள பாதிப்புகள் மற்றும் பிற நாடுகளின் பேரிடர்களுக்கு உதவும் தங்கமனம் படைத்த பகவான் டீ ஸ்டால் சிவக்குமார்.

    புதுக்கோட்டை மாவட்டம் மங்கனாம்பட்டியைச் சேர்ந்தவர் 45 வயதாகும் சிவக்குமார். புதுக்கோட்டை பேராவூரணி சாலையில் உள்ள வம்பன் 4 ரோடு பகுதியில் டீக்கடை ஒன்றை பல காலமாக நடத்தி வருகிறார்.

    சமூக நலனின் மீது அளவு கடந்த பற்று கொண்டிருந்த இவரை, கடந்த 2018ம் ஆண்டு டெல்டா பகுதிகளை புரட்டிப் போட்ட கஜா புயல் இவரது வாழ்வாதாரத்தையும் கடுமையாக புரட்டிப் போட்டது.

    சிவகுமார்


    அந்த நேரத்தில் தான் விவசாயிகள் தங்களது விவசாயக் கடனை தள்ளுபடி செய்யக் கோரி போராட்டங்களை நடத்தி வந்தனர். விவசாயிகளின் இந்த போராட்டங்கள் மற்றும் விவசாயிகளின் துயரங்களை கண்ட சிவக்குமார், விவசாயமே பிரதானமாக பகுதியில் டீக்கடை நடத்தி வருவதால் விவசாயிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய நினைத்தார்.

    சிவகுமார் குறித்து வந்த செய்திகள்


    அதுநாள் வரையில் தனது கடையில் கடன் வைத்திருந்த வாடிக்கையாளர்களின் கடன் தொகையான 12,000 ரூபாய்க்கும் அதிகமான கடனை தள்ளுபடி செய்து அறிவித்தார்.

    இலவசமாக வழங்கப்பட்ட பால்


    இதனால் அப்பகுதியில் இருந்த விவசாயிகளின் ஆபத்பாந்தவனாக அந்த சமயத்தில் அறியப்பட்டார் சிவக்குமார். அதன் பிறகு தன்னால் முடிந்த சேவைகளை செய்து வரும் சிவக்குமார், ஆண்டுக்கு ஒரு முறையாவது தனது வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகளை முழுவதும் இலவசமாக வழங்கி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கி தொடர்ந்து செயல்பட்டும் வருகிறார்.

    மொய் விருந்திற்காக வழங்கப்பட்ட அழைப்பிதழ்


    இந்த நிலையில், கடந்த ஆண்டு கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்த டெல்லி மக்களுக்கு உதவ நினைத்த அவர், அவரது பகுதியில் நடக்கும் மொய் விருந்து நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் நடத்தி அதில் கிடைக்கும் தொகையை டெல்லி மக்களுக்கு அனுப்ப முடிவு செய்து பத்திரிக்கை அடித்து அழைப்பிதழ்களை வழங்கினார்.

    டீ கடையில் சிவகுமார்


    தனது கடையில் தேநீர் குடிப்பவர்கள் தேநீருக்கு பணம் தரத் தேவையில்லை எனவும், தேநீர் அருந்தி விட்டு தன்னால் ஆன தொகையை மொய்ச்சட்டியில் போட்டு விட்டு செல்லும் வகையில் மொய்விருந்து நடத்தி 28,000 ரூபாயை மொய்யாக பெற்றார்.

    மாவட்ட ஆட்சியரிடம் நிதியளித்த சிவகுமார்


    அந்த நேரத்தில் டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்து, தமிழகத்தில் கொரோனா கோரமுகம் காட்டவே அந்த நிதியை தமிழக அரசுக்கு வழங்க முடிவு செய்து அந்த தொகையை அப்போதைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியிடம் காசோலையாக வழங்கினார்.

    இதன்பிறகும், சமூக சேவையில் கொண்ட ஆர்வம் காரணமாக கொரோனா உள்ளிட்ட பாதிப்புகளால் பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளுக்கு உடை மற்றும் தேவையான பொருட்களை வாங்கித் தருவது, முதியோர்களுக்கு தன்னால் இயன்ற பொருளாதார உதவிகள் உள்ளிட்ட உதவிகளை செய்வது என நேசக் கரம் நீட்டி வருகிறார்.

    அத்தோடு மட்டுமில்லாமல், பகவான் டீ ஸ்டாலில் கஜாவிற்குப் பிறகு கைக்குழந்தைகளுக்கு வாங்கும் பால் முற்றிலும் இலவசமாக காலம் முழுவதும் வழங்கப்படும் என கடையில் அறிவிப்பையும் வைத்து பால் வழங்கி வருகிறார்.

    இறுதியாக, அண்டை நாடான இலங்கை மக்கள் பொருளாதார சிக்கலில் சிக்கி சிரமப்படுவதைக் கண்ட சிவக்குமார் தனது டீக்கடையில் மீண்டும் ஒரு மொய் விருந்தை நடத்தி அதில் கிடைத்த தொகையான 14,150 ரூபாயை காசோலையாக மாற்றி தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு புதுக்கோட்டை வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி உள்ளார்.

    கிராமப் புரத்தில் டீக்கடை நடத்தி வரும் சிவக்குமாரின் கடையில் இல்லாதவர்கள் டீ குடித்து விட்டு காசில்லை என்றாலும் இருந்தால் கொடுங்கள் இல்லையென்றால் பரவாயில்லை என்று புன்முறுவலோடு வழியனுப்பி வைக்கிறார்.

    குடும்பம்

    45 வயதாகும் சிவக்குமாருக்கு சொந்த ஊர் மாங்கனாம்பட்டியாகும். அவருக்கு மாரிக்கண்ணு என்ற மனைவியும், சிவரஞ்சனி (20), சிவராமகிருஷ்ணன் (18), கிருஷ்ணவேணி (16) என்ற இரு மகன்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    மூத்த மகள் இளங்கலை கணிதம் படித்து முடித்துவிட்ட நிலையில், மகன் இரண்டாமாண்டு பொறியியல் படித்து வருகிறார். கடைசி மகள் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

    மனைவியும் தன்னோடு முழுநேரமும் டீ கடையில் பணி செய்ய வந்து விடுவதால் ஊரில் இருக்கும் சிறு அளவு நிலத்தில் விவசாயம் செய்ய அல்லல்படுவதாகவும், தன்னால் முயன்ற நேரத்தை ஒதுக்கி தற்போது கடலை விவசாயம் செய்து வருகிறார் சிவக்குமார்.

    கடும் ஏழ்மையிலும் மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்துக் கொண்டே, தனது சக்திக்கும் மீறி சமூக சேவைகளை செய்து வரும் சிவக்குமார் வம்பன் பகுதிக்கு மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டத்திற்கே ஒரு வழிகாட்டி என்றே சொல்லலாம்.

    சிவக்குமார், பகவான் டீ ஸ்டால்.
    தொடர்புக்கு - 9095336300

    செய்தியாளர்: துர்கா மகேஸ்வரன், புதுக்கோட்டை.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி