தமிழர்களின் வீர விளையாட்டு.... தடைகளை பலவற்றை கடந்த விளையாட்டு... இளைஞர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த விளையாட்டு... இத்தனை பெருமைகளுக்கு சொந்தமானது தான் ஜல்லிக்கட்டு. அத்தனை சிறப்புகள் பெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டை ஆராதிக்கும் பகுதி என்றால் புதுக்கோட்டை மாவட்டம் தான். இங்கு தான் அதிக அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.
அதிக எண்ணிக்கையிலான வாடிகளும் இங்கே தான் இருக்கின்றன. எனில் காளைகளுக்கு காளையர்களுக்கு பஞ்சம் இருக்குமா என்ன?
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி வாடியில் களம் இறங்க காளைகளும் அதனை எதிர்கொள்ள காளையர்களும் தீவிர பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் விராலிமலை அருகில் உள்ள திருநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக காளைகளை தயார்படுத்தி வருவதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் இந்த ஊர் மக்கள்.
அவர்கள் காளைகளை பராமரிப்பது குறித்தும் அதற்கு வழங்கப்படும் உணவுகள் பற்றியும் மேலும் அதற்கான பயிற்சிகள் பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்வோம். காணும் இடம் எங்கும் ஜல்லிக்கட்டு காளைகள்.
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் காலையில் எழுந்த உடனே தங்களது காளைகளை பராமரிக்க தொடங்கி விடுகின்றனர். அதன் பின் காளைக்கு உணவளிக்கும் நேரம், பயிற்சிகள், காளைகளுக்கு குளியல் , நடைப்பயிற்சி, மண்மேட்டை முட்டுதல், நீச்சல், போன்றவற்றில் காளைகளை ஈடுபடுத்துவதே அவர்களின் முழு நேர வேலையாக கொண்டுள்ளனர் இந்த ஊர் மக்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய இளைஞர்கள், ”நாங்கள் சிறு வயது முதலே காளைகளைக் கண்டு ஈர்ப்படைந்து அதனை வளர்க்கும் ஆர்வத்திலேயே நாங்கள் வளர்ந்தோம். தற்போது நாங்கள் பத்திற்கு மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகிறோம். காளைகளுக்கு தவிடு, புண்ணாக்கு, கடலை மிட்டாய், வாழைப்பழம், முந்திரி என சத்தான உணவுப் பொருட்களை வழங்குவோம்.
காளையை குளிப்பாட்டுவது பின் அதற்குப் பயிற்சி அளிப்பது மண்மேடு முட்ட வைப்பது, நீச்சல் பயிற்சி நடை பயிற்சி போன்றவற்றுடன் சேர்த்து பயிற்சியினை வழங்குவோம். காலையிலிருந்து மாலை வரை நாங்கள் காளைகளை தயார் செய்வதையே முழுமூச்சாக கொண்டுள்ளோம்.
ஒரு காளைக்கு மாதம் 30,000 ரூபாய் வரை செலவு செய்து வருகிறோம். ஆனால் அதனை நாங்கள் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு செலவு செய்வதாகவே நினைக்கின்றோம். ஏனென்றால் காளைகள் எங்கள் குடும்ப உறுப்பினர்கள்தான். ரேஷன் கார்டில் பெயர் சேர்க்காதது தான் குறை ” என்று ஆதங்கப்படும் அளவுக்கு காளைகள் மீது அதீத அன்பு வைத்திருக்கின்றனர் அதன் உரிமையாளர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன் விடுதியில் 17ம் தேதி ஜல்லிக்கட்டு - விழா ஏற்பாடுகள் தீவிரம்
செய்தியாளர்: சினேகா விஜயன், புதுக்கோட்டை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai