முகப்பு /செய்தி /புதுச்சேரி / சுற்றுலாவை மேம்படுத்த அரசுப் பணத்தில் துபாய் செல்லும் புதுச்சேரி எம்எல்ஏ-க்கள்: எதிர்க்கட்சிகள் கண்டனம்

சுற்றுலாவை மேம்படுத்த அரசுப் பணத்தில் துபாய் செல்லும் புதுச்சேரி எம்எல்ஏ-க்கள்: எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுச்சேரி சுற்றுலா

புதுச்சேரி சுற்றுலா

புதுச்சேரி எம்.எல்.ஏக்கள் துபாய் செல்வதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

வார இறுதி நாட்களில் புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாரம் முழுவதும் சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வரவழைக்கும் வகையில் புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் நாட்டிலேயே அதிகம் தேடப்படும் நகர பட்டியலில் புதுச்சேரி முதலிடம் பிடித்துள்ளது. சுற்றுலா மூலம் வருவாயை பெருக்க சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து  வருகின்றனர்.

இதற்காக பல்வேறு நாடுகளின் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றோடும் சுற்றுலாத்துறை பேச்சுவார்த்தை  நடத்தி வருகிறது. சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க  அரசு திட்டமிட்டுள்ளது.

துபாய் நாட்டில் அரேபிய சுற்றுலா பயணச் சந்தை கண்காட்சி (Arabian Travel Market 2023) நாளை ( மே  2ந் தேதி) முதல் 5ந் தேதி வரை நடக்கிறது. இந்தக் கண்காட்சியில் இடம் பெறும் இந்திய அரங்கில் புதுச்சேரி அரங்கும் இடம் பெறுகிறது. இந்த  அரங்கில் புதுச்சேரியின் பாரம்பரிய வரலாறு, சுற்றுலாத் தலங்கள், தங்குமிடம், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், புதுவை அரசின் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விளக்கப்பட உள்ளது. இந்த கண்காட்சியை பார்வையிட புதுச்சேரி எம்எல்ஏக்கள் செல்கின்றனர்.

முதலமைச்சர் ரங்கசாமி,  அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தவிர்த்து சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் இந்த பயணத்திற்கு இசைவு தெரிவித்துள்ளனர். புதுச்சேரியிலிருந்து வரும் 2ந் தேதி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் புறப்பட்டு சென்னை விமான நிலயத்தில் இருந்து துபாய் செல்கின்றனர். அன்றைய தினம் துபாய் கண்காட்சியை  பார்வையிடுகின்றனர்.

தொடர்ந்து 5ந் தேதி வரை துபாயின் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்க்கின்றனர். அன்றைய தினம் இரவு துபாயிலிருந்து திரும்புகின்றனர். உலகளவில் சுற்றுலா வளர்ச்சி, நவீன சுற்றுலா திட்டம், நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா ஒருங்கிணைப்பு  ஆகியவை பற்றி எம்எல்ஏக்கள் தெரிந்து கொள்கின்றனர். துபாய் வளர்ச்சி குறித்தும் அங்குள்ள அதிகாரிகளிடம் கலந்துரையாடுகின்றனர். இந்த பயணத்தின் மூலம் சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை புதுச்சேரிக்கு வரவழைக்க புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட உள்ளன.

இதையும் வாசிக்ககலைஞர்களுடன் தாண்டியா நடனம் ஆடி மகிழ்ந்த ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்...

அதிமுக எதிர்ப்பு: நிதி நெருக்கடியில் புதுச்சேரி சிச்கி இருக்கும் நிலையில் இது போன்ற நிதி வீண் விரயம் செய்வதை அரசு தவிர்க்க வேண்டும் என அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார். அரசின் கடன் 10,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதற்காக ஆண்டிற்கு 900 கோடி ருபாய் வட்டி செலுத்தப்படுகிறது. கடந்த ஆட்சியில் எம்எல்ஏக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல கட்டுபாடு விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது சுற்றுலா மேம்பாடு என கூறிவிட்டு ஒட்டுமொத்த எம்எல்ஏக்களும் செல்வது இன்ப சுற்றுலா என்றே கூற வேண்டும் என அன்பழகன் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு: இதே போல் காங்கிரஸ் கட்சியும் எம்எல்ஏக்களின் துபாய் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. பஞ்சாலைகள் மூடப்பட்டதால் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. இது பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. ஊதாரித்தனமாக செலவிடுகிறார்கள். மக்கள் பணத்தை வீணடிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

First published:

Tags: Puducherry