புதுச்சேரியில் நள்ளிரவில் ஹோட்டலின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி- கடலூர் சாலையில் தவளக்குப்பம் தனியார் திருமண நிலையம் அருகே துரித உணவக ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலை பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த திருவேங்கடம் (வயது 43) என்பவர் நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல கடந்த 19ஆம் தேதி இரவு வியாபாரம் முடித்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் கடையை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கடையில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணமும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் மேஜை, நாற்காலிகள் உடைக்கப்பட்டும் இருந்தது. கடையை உடைத்து பணம் திருடு போன சம்பவம் குறித்து தவளக்குப்பம் போலீசில் திருவேங்கடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். போலீசார் டீக்கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது மோட்டார் சைக்கிளில் இருவர் வருவதும் அதில் ஒருவர் முகத்தை முழுமையாக மூடிக் கொண்டு உள்ளே வந்து சிசிடிவி கேமராவை உடைப்பதும் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் வாகன சோதனையில் தவளக்குப்பம் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை போட்டனர். அதனை ஓட்டி வந்த நபரின் பதில் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தீவிர விசாரணையில் புதுச்சேரி கருவடிகுப்பம் கால்நடை மருத்துவமனை வீதியை சேர்ந்த சரத் (எ) சரத்ராஜ் (23) என தெரிய வந்தது. அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தற்போது பிடிக்கப்பட்டுள்ள சரத் (எ) சரத்ராஜ் மீது 15-க்கும் மேற்பட்ட கொலை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் மீது புதுச்சேரியில் சுமார் 7 காவல் நிலையங்களிலும், தமிழ்நாட்டில் 5-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவாகியுள்ளது.
இது தவிர இவரது கூட்டாளிகளான குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் இவரது தொடர்பில் உள்ளதாக தெரிவித்தார். இந்த கும்பலின் உள்ளவர்கள் முகமூடி அணிந்து கடை உடைத்து திருடுவது மட்டுமே தொழிலாக கொண்டுள்ளனர். இவர் 12 வயது முதலே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சரத்ராஜ் மீது புதுச்சேரியில் ஒரு முறை குண்டர்த் தடுப்புச் சட்டமும், தமிழ்நாட்டில் ஒரு குண்டர்த் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட சரத்ராஜ் புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து உளுந்தூர்பேட்டை பகுதியில் திருடிய பல்சர் பைக் ஒன்றும் கடை உடைப்பதற்காக பயன்படுத்தப்படும் கனமான இரும்பு ராடுகளும் ரூபாய் 11,500 பணமும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த கும்பல் புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள தமிழக பகுதிகளான கோட்டக்குப்பம்,வானூர்,குறிஞ்சிப்பாடி,குள்ளசாவடி,செங்கல்பட்டு என பல பகுதிகளில் கைவரிசை காட்டி வருகின்றனர். தனித்தனி குழுவாக பிரிந்து பகலில் கடைகளை நோட்டமிட்டு இரவில் பூட்டை உடைத்து திருடுவது இவர்களது பாணி. திருடும் பணத்தை வழக்கு செலவிற்கும் குடிப்பதற்கும் செலவிட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Puducherry, Theft