‘புதுச்சேரி சுற்றுலா’ என்றாலே கடற்கரைகள் மற்றும் அழகான கட்டிடங்கள் தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் பிரெஞ்சு காலனியாக இருந்த இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற கோவில்களும் நிறைந்திருக்கின்றன. இவற்றுள் சில, பல நூற்றாண்டுகளை கடந்தும் கம்பீரமாக வரலாற்று சின்னங்களாக காட்சியளிக்கின்றன.
1. கடற்கரைப் பகுதியில் உள்ள மணக்குள விநாயகர் ஆலயம்.
2. ரயில் நிலையம் அருகே உள்ள இஸ்லாமியர் கட்டிய கௌசிக பாலசுப்பிரமணியம் ஆலயம்.
3. மிஷன் வீதியில் உள்ள காலத்தீஸ்வரர் ஆலயம்.
4. காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் ஆலயம்.
5. மற்றும் சோழர்கள் கட்டிய வரதராஜ பெருமாள் கோவில்
என சுற்றுலா பயணிகளையும், ஆன்மீக அன்பர்களையும்கவரக்கூடிய மிக முக்கியமான 5 கோவில்கள் பற்றி தான் இங்க பார்க்கப்போறோம்.. இந்த கோவில்கள் அனைத்தும் நகர் பகுதியிலேயே அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகள் இவற்றை எளிதாக சென்று தரிசித்து செல்லலாம்....
1. அருள்மிகு மணக்குள விநாயகர் கோவில்:
புதுவை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரை அருகே உள்ளது மணக்குள விநாயகர் ஆலயம். ஆலயத்தின் வர்ணம் பூசப்பட்ட கோபுரம் பார்வையாளர்களின் உடனடி கவனத்தை ஈர்க்கிறது, அதே நேரத்தில் கோவிலின் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலையை பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கு. 350 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலானது விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது புதுவை மட்டுமல்லாமல் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்களையும் ஈர்த்து வருகிறது மணக்குள விநாயகர் கோவில்..
இடம் : மணக்குள விநாயகர் கோயில் தெரு, ஒயிட் டவுன்
தரிசனம்நேரம்: தினமும் காலை 5:45 முதல் 12:30 மணி வரை மற்றும் மாலை 4:00 முதல் இரவு 9:30 வரை.
2. ஸ்ரீ கௌசிக பாலசுப்பிரமணிய ஆலயம்:
புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ளது கௌசிக பாலசுப்பிரமணிய ஆலயம். இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் முருகர் மேல் உள்ள பக்தியால் ஒரு இஸ்லாமியர் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கோவிலை கட்டியிருக்காரு.. மற்றுமொரு சிறப்பாக மலேசியா நாட்டில் உள்ள பத்துமலை முருகன் ஆலயத்தில் உள்ள சிலை போல் இங்கு சிலையை வடிவமைத்து வழிபட்டு வருகின்றனர் பக்தர்கள். வாரம்தோறும் செவ்வாய் கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும்.
இடம்: புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே உள்ளது கௌசிக பாலசுப்பிரமணிய ஆலயம்.
தரிசனம்நேரம்: தினமும் காலை 6.00 முதல் 1 மணி வரை மற்றும் மாலை 4:00 முதல் இரவு 9:30 வரை;
3. வரதராஜ பெருமாள் கோயில்:
புதுச்சேரி நகரப் பகுதியில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோயில் 800 ஆண்டுகளுக்கும் மேலாக நகரத்தின் மையப்பகுதியில் உள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் பிற்கால சோழர்களால் இந்த கோவில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த விஷ்ணு கோவில் புதுச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பழமையான ஆலயங்களில் ஒன்றாகும். இங்கு தென்கலை - வடகலை பேதம் கிடையாது.. இங்கு, விஷ்ணு பகவான் வரதராஜப் பெருமாள் வடிவில் வழிபடப்படுவதால், இக்கோயிலுக்கு இப்பெயர் வந்ததுள்ளது.
110 அடி உயரம் கொண்ட ஐந்து அடுக்கு ராஜ கோபுரம் இந்த ஆலயத்தில் உள்ளது.
இடம் : மகாத்மா காந்தி சாலை, ஹெரிடேஜ் டவுன்
தரிசனம் நேரம் : காலை 6:30 முதல் 12:00 மணி வரை மற்றும் மாலை 4:30 முதல் இரவு 9:30 வரை.
4. ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயம்:
வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ள புதுச்சேரி நகரத்துக்கு வேதபுரி, வேதவனம் ஆகிய பெயர்களும் உண்டு. பழைமையான இவ்வூரின் பெயரையே தனது திருப்பெயராகவும் ஏற்று, இங்கே திருக்கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு வேதபுரீஸ்வரர். இக்கோவில் 1748 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் படையினரால் முற்றிலுமாக இடிக்கப்பட்டது. இது மீண்டும் 1788 இல் பொதுமக்களால் புனரமைக்கப்பட்டது, இன்று புதுச்சேரியில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது . இக்கோயிலில் வேதபுரீஸ்வரர் லிங்க வடிவில் வழிபடப்படுகிறார்.....
இடம் : மகாத்மா காந்தி சாலை,
தரிசனம் நேரம் : காலை 6:00 முதல் 12:30 மணி வரை மற்றும் மாலை 4:30 முதல் இரவு 8:00 வரை
5. ஸ்ரீ காலத்தீஸ்வரர் ஆலயம் (செட்டி கோவில்):
புதுச்சேரி மிஷன் வீதி - செட்டி தெரு சந்திப்பில் அமைந்துள்ளது காலத்தீஸ்வரர் ஆலயம். ஹரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு என்கின்ற பழமொழிக்கு ஏற்றார்போல் இவ்வாலயத்தில் சிவபெருமானும் மற்றும் விஷ்ணு பெரும்பாலும் ஒரே ஆலயத்தில் காட்சியளிக்கின்றனர். நூறாண்டுகளுக்கு மேல் பழமையான ஆலயம் காளித்தீஸ்வரர் ஆலயம்
இடம் ; மிஷன் வீதி செட்டி தெரு சந்திப்பில் அமைந்துள்ளது.
தரிசனம் நேரம்:காலை 6:00 முதல் 12:30 மணி வரை மற்றும் மாலை 4:30 முதல் இரவு 8:00 வரை
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry, Tourist spots