ஏப்ரல், மே மாதங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்களை தெரிவித்துள்ளது. கோடைகால வெப்பத்தை சமாளிப்பதற்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து புதுவை அரசு மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஜி.ஸ்ரீராமலு கூறியதாவது, “கோடை வெயில் காலத்தில் மக்கள் அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும். மேலும் மோர், எலுமிச்சை சாறு இவற்றுடன் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும். அல்லது இளநீர் பருக வேண்டும். தளர்வான மெல்லிய பருத்தி ஆடைகளை உடுத்த வேண்டும். வெயிலில் செல்லும்போது குடை, தொப்பி, குளிரூட்டும் கண் கண்ணாடி அணிந்து செல்லவேண்டும். குழந்தைகளை வெயிலில் அழைத்து செல்லும்போது அதிக அளவில் தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும்.
வெப்பம் அதிகமாக இருக்கும் பகல் 12 முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை கவனமாக பார்த்துக் கொள்வதுடன் அவர்களை வெயில் நேரத்தில் வெளியில் அழைத்து செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தலைச்சுற்றல், மயக்கம், குமட்டல், தலைவலி, வழக்கத்திற்கு மாறாக அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல், சுவாச பிரச்சனை ஆகிய ஆகியவை இருந்தால் மருத்துவர்களை உடனடியாக அணுக வேண்டும்.
இதையும் படிங்க : புதுச்சேரி ஆரோவில் உதய தினம்... தீபம் ஏற்றி வழிபட்ட ஆரோவில்வாசிகள்!
சூரிய வெப்பத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவர்களை நிழலில் மற்றும் காற்றோட்டமான இடத்தில் படுக்க வைக்க வேண்டும். ஆடைகளை தளர்த்தி குளிர்ந்த நீரை உடம்பில் ஒற்றி எடுக்க வேண்டும். குறிப்பாக அக்குள் மற்றும் கவட்டையில் ஈரத்துண்டு ஐஸ் பேக் மூலம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். மின்விசிறியின் காற்று உடலில் படும்படி வைக்க வேண்டும். பாதங்களை சற்று உயர்த்தி படுக்க வைக்க வேண்டும்.
பின்னர் மருத்துவ உதவி தேவையென்றால் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் அல்லது 108 ஆம்புலன்ஸை அழைக்கலாம். வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களை சமாளிக்கவும் அவற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே புதுச்சேரி மக்கள் அதிக சூரிய வெப்பத்தால் உருவாகும் அயர்ச்சி மற்றும் பக்கவாதத்தை தடுத்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஜி. ஸ்ரீராமலு அறிவுறுத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry, Summer