மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் கடந்த மாதம் 22ம் தேதி பெயர்ச்சி அடைந்ததை தொடர்ந்து, மேஷ ராசிக்குரிய நதியான புதுச்சேரி திருக்காஞ்சி சங்கராபரணி நதியில் புஷ்கரணி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
சங்கராபரணி நதி திருக்காஞ்சி பகுதியில் வடக்கு நோக்கி செல்வதாலும், கங்கை நதிக்கு நிகரானது என்று சொல்லப்படுவதாலும், இந்த புஷ்கரணி விழா மிக சிறப்பு பெற்றது.
கடந்த 22ம் தேதி சங்கராபரணி ஆதி புஷ்கரணி விழா கோபூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட சங்கராபரணி நதியில் புனித தீர்த்தங்கள் கலக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழா நாளில் அந்தந்த ராசிக்காரர்கள் புனித நீராடினர். புஷ்கரணி விழாவின் 12வது மற்றும் கடைசி நாள் காலை 108 கலாசாபிஷேகமும், மதியம் தீர்த்தவாரியும் நடந்தது. கடைசி நாள் என்பதால் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதனால் காலை முதல் பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதியது. பக்தர்கள் சங்கராபரணி நதியில் புனித நீராடிவிட்டு, பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து கங்கை வராக நதீஸ்வரரை தரிசித்தனர். மாலையில் நடந்த கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில், காஞ்சி மடாதிபதி விஜேந்திர சரஸ்வதி சாமிகள், சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அத்துடன் புஷ்கரணி விழா நிறைவு பெற்றது.
இந்த திருவிழாவில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க சுழற்சி முறையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் அரசு துறை உயர் அதிகாரிகள் செய்திருந்தனர்.
முன்னதாக விழாவை சிறப்பாக நடத்தியதற்காக அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கோவில் தலைமை அர்ச்சகர் சரவண சிவாச்சாரியாருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு அதிகாரி சீதாராமன், தனி அதிகாரி சதீஷ் மற்றும் வேளாண்துறை அமைச்சரின் தனி செயலர் மனோகரன், முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gurupeyarchi, Local News, Puducherry