ருத்ர தாண்டவம், திரௌபதி படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ஜி. இவரின் 3வது படமான செல்வராகவன் மற்றும் நட்டி (எ) நடராஜன் நடித்த பகாசூரன். இந்த திரைப்படம் கடந்த 17ம் தேதி நாடு முழுவதும் வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 300 திரையரங்களுக்கு மேல் பகாசுரன் திரைப்படம் வெளியானது. புதுச்சேரி ஜீவா ருக்மணி தியேட்டரில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பகாசூரன் திரைப்படம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனரான மோகன் ஜி திரையரங்கத்திற்கு திடீரென நேரடியாக வந்து படம் பார்த்துள்ளார். பின்னர் வெளியே வந்தவர்களிடம் படத்தை பற்றி கருத்து கேட்டு தெரிந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து, படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் படம் குடும்ப படமாக இருக்கிறது. மிகவும் நன்றாக இருக்கிறது என்று அவரிடம் தெரிவித்தனர்
பின்னர் மோகன் ஜி கூறுகையில், “கொரோனா காலகட்டத்தில் பெண்களின் வறுமை நிலையை பயன்படுத்தி அவர்களை ஆன்லைன் பாலியல் தொழிலுக்கு சிலர் கொண்டு சென்றனர். அது மட்டுமல்லாமல் மொபைல் போனில் இருக்கும் ஆப்ஸ்களை பயன்படுத்தி இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் குடும்பத்தில் அது எந்த மாதிரியான விளைவுகளை உருவாக்கும் என்ற ஆழமான கருத்தை மையமாக வைத்தும், ஒரு மொபைல் போனில் எந்த அளவுக்கு நன்மைகள் இருக்கிறதோ அந்த அளவுக்கு அதில் கெடுதலும் இருக்கிறது. மேலும் தமது பிள்ளைகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதனை மையமாக வைத்து பகாசூரன் படம் எடுக்கப்பட்டது. இந்த படம் வெளியானதில் இருந்து பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. ஏகப்பட்ட பேர் போன் செய்து என்னை பாராட்டி வருகின்றனர்” என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “படம் வெளியாகி உள்ள ஜீவா தியேட்டருக்கு படத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக தான் நேரில் வந்ததேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெண்களின் விழிப்புணர்வுக்காகவே படம் எடுத்தேன். எந்த சமுதாயத்திற்காகவும் படம் எடுக்கவில்லை. நான் படம் எடுத்தால் என்னை தனியாக அடையாளம் காட்டி ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. இதை எல்லாம் கலைத்தெறிந்து பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்க தயாராக இருக்கிறேன்.
மற்ற திரைப்படங்களும், மீடியாக்களும் சொல்லாத கருத்தைதான் என் படங்கள் சொல்கின்றன. நல்ல கருத்தை சொன்னால் இதுபோல தான் இருக்கும். ருத்ர தாண்டவம், திரௌபதி போன்ற படங்களிலும் நான் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறேன். வளர்ந்து வரும் இயக்குனர்கள் பொருமையாக இருந்து தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். புதுச்சேரியில் உள்ளவர்கள் குடும்பமாக வந்து தனது படத்தை பார்த்து தனக்கு ஆதரவு தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cinema, Local News, Puducherry