புதுச்சேரியில் வரும் 15ம் தேதி துவங்கப்பட உள்ள கன்டெய்னர் டெலிவரி சேவைக்கான பிரத்யேக கப்பல் உப்பளம் துறைமுகத்திற்கு வந்தடைந்தது. சென்னை துறைமுகத்தில் இட நெருக்கடி காரணமாக, வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் வரும் கன்டெய்னர்களை இறக்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, புதுச்சேரி துறைமுகத்தில் கன்டெய்னர்களை இறக்கி டெலிவரி செய்ய, இரு துறைமுகங்களுக்கு இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை துறைமுகம் அல்லது எண்ணுார் துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர்களை கடல் வழியாக புதுச்சேரி, உப்பளம் துறைமுகத்திற்கு கொண்டு வந்து இறக்கி டெலிவரி செய்தல் மற்றும் புதுச்சேரியில் இருந்து கன்டெய்னர்களை ஏற்றிச் சென்று சென்னை துறைமுகத்தில் இறக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.
இதையொட்டி, கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து கடந்த 6ம் தேதி புறப்பட்ட சென்னை குளோபல் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவன கப்பல், புதுச்சேரி, உப்பளம் துறைமுகத்தை வந்தடைந்தது. 67 மீட்டர் உயரம், 13 மீட்டர் அகலம் கொண்ட இந்த கப்பலில் 106 கன்டெய்னர்கள் ஏற்றிச்செல்லும் இடவசதி உள்ளது. ஒவ்வொரு கன்டெய்னரும், 20 அடி அல்லது 40 அடியில் 25 டன்கள் கொள்ளளவு நிரப்பும் வகையில் உள்ளது.
இதில், 20 கன்டெய்னர்களில் மருந்து பொருட்களும், மற்ற கன்டெய்னர்களில் எலக்ட்ரானிக் உட்பட பல்வேறு தொழில் ரீதியான அனைத்து பொருட்களும் கொண்டு வரப்பட உள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலில் கன்டெய்னர்களை புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் கொண்டு வந்து இறக்கிட புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக துறைமுகத்தில் நான்கு குடோன்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. இங்கு, சரக்குகளை தேக்கி வைத்து, கனரக வாகனங்கள் மூலம் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
இந்த கப்பல் கன்டெய்னர் டெலிவரி சேவை, வரும் 15ம் தேதி முதல் துவங்க உள்ளது. அதனையொட்டி, முதல் முறையாக புதுச்சேரி உப்பளம் துறைமுகத்திற்கு வந்த கன்டெய்னர் டெலிவரி கப்பலை பொதுமக்கள் பலரும் வந்து ஆர்வத்தோடு பார்த்து ரசித்ததோடு, அதனருகே நின்று 'செல்பி' எடுத்துக் கொண்டனர். இந்த கன்டெய்னர் டெலிவரி சேவை மூலம், புதுச்சேரி அரசுக்கு பல்வேறு வகையில் வருவாய் அதிகரிப்பதோடு, உள்ளூர் இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry