

சீனாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் உருவான செயற்கை சுனாமியால் 44 பேர் காயமடைந்தனர். யூலாங் பகுதியில் உள்ள இந்த பூங்காவில் தண்ணீர் விளையாட்டுகளுக்கான பகுதியில் ஏராளமானோர் உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது செயற்கை அலைகளை உருவாக்கும் கருவியில் ஏற்பட்ட கோளாறால் 10 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்து பலர் தூக்கி வீசப்பட்டனர்.


இங்கிலாந்தின் யார்க்சைர் பகுதியில் கனமழையால் நிறைந்துள்ள அணை உடையும் தருவாயில் உள்ளதால் 6ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். யார்க்சைர் பகுதியிலுள்ள வேலே பிரிட்ஜ் என்ற இடத்தில் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டோட்ப்ரூக் அணை உள்ளது. கனமழை வெள்ளத்தால் அணை முழுக்கொள்ளளவை எட்டி நிரம்பிவழியும் நிலையில், ஒரு பகுதி உடையும் தருவாயில் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் காட்சி சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. மேகங்களுக்கு இடையே இந்த விமானம் தரையிறங்கும் ரம்மியமான காட்சியை எமிரேட்ஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமைதியான ஓடுபாதையில் திடீரென மேகத்தை கிழித்துக்கொண்டு விமானம் தரையிறங்கும் காட்சி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், 6 மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 74 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் எரிந்துவரும் தீயை அணைக்கும் பணிகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். செயற்கைக்கோளின் உதவியுடன் தீ அதிகமாக எரியும் பகுதிகள் கண்டறியப்பட்டு, 17 ஹெலிகாப்டர்களிலிருந்து தண்ணீரை தெளித்து அணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. (Image: AP)


போலந்து தலைநகர் வார்சாவில், ஜெர்மனியின் நாசி படைகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றதன் 75-ஆவது ஆண்டு நினைவு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் ஒன்றுகூடிய பொதுமக்கள் 2-ம் உலகப் போரில் உயிரிழந்த 18ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலந்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். (Image: Getty)