ஆண்டாள் வரலாறு:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்து வந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்). திருவில்லிபுத்தூர் கோவிலுக்கு மலர்கள் கொய்து மாலைகள் தொடுத்து கொடுப்பதையே தமது கடமையாக கொண்டவர்.
ஒரு நாள் தோட்டத்தில் பூப்பறிக்க சென்றபோது, குழந்தை ஒன்றை (ஆண்டாள்) துளசி செடியின் கீழ் கண்டெடுத்தார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை (ஆண்டாள்).
கண்ணன் மீது காதல் கொண்டாள்:
இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராகவும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னை கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்து பாவனை செய்து வந்தார்.
கோதை சூட்டிய மாலைகள்:
இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூட்டப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையை கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டு புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை சூடிய மாலைகளே தனக்கு உகந்தவை எனவும், அவற்றையே தனக்கு சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்றும், “இறைவனையே ஆண்டவள்” என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.
ஸ்ரீரங்கநாதனை மணக்க பிடிவாதம்:
கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோவிலில் உள்ள இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார்.
என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோவிலுக்கு அழைத்துவருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள்.
திருப்பதிக்கு செல்லும் ஆண்டாள் மாலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவின் 5ம் நாளில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கருட சேவை நடைபெறும். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடி ஏழுமலையான் கருடவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதற்காக ஏழுமலையானுக்கு மாலை கொண்டு செல்லும் வைபவம் ஆண்டாள் கோவிலில் நடக்கும்.
முன்னதாக அந்த மாலையை ஆண்டாள் அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். பிறகு இந்த மாலையோடு சேர்த்து ஆபரணங்கள், கிளி உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படும்.