கிழக்கு நோக்கி அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில் சோழர் காலத்தைச் சார்ந்தது என்று கூறப்படுகிறது. எனினும் இங்கே கிடைத்த துர்க்கை சிலையானது, பல்லவர் காலத்திலும் இருந்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்குள் நுழைந்தால், பிரமாண்ட திருச்சுற்று மாளிகை அமைந்திருப்பதைப் பார்க்க முடியும். இதில் இரட்டைப் பிரகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உருண்டை வடிவ கல்தூண்கள் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.
முகமண்டபம் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது. இந்த மண்டபத்தில் நான்கு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. பிரகாரத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட விநாயகர் காட்சியளிக்கிறார். முருகர் வள்ளி-தெய்வயானையுடன் அருள்புரிகிறார். பைரவர் துர்க்கை, ஆகியோரின் சன்னிதிகளும் உள்ளன. வடதிசையில் சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் இருப்பதைப் பார்க்க முடியும்.
பல்வேறு சிறப்புகளையும், பழமையை போற்றும் கல்வெட்டுகளையும் கொண்ட இந்த கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் இந்த கோவிலில் வழிபட்டுவது வழக்கம். கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனில் இந்தப் பகுதி குறித்தும், இங்கு நிகழ்ந்த மன்னர்களின் வாழ்க்கையைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோவில் தற்போது தொல்லியல் துறையால் புதுப்பொலிவுடன் மறு கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.