சிவாலயம் :
இந்த கோவில் முன்னர் சிவாலயமாக இருந்துள்ளது. முன்னொரு காலத்தில், வேட்டைக்கு சென்ற சோழ மன்னன் கரும்பு ஒன்றை வாளால் வெட்டியபோது, கரும்பிலிருந்து ரத்தம் வடிந்துள்ளது. உடனே சோழ மன்னன் கரும்பு இருந்த இடத்தை பார்க்கையில் சிவலிங்கம் தென்பட்டுள்ளது. பிறகு அங்கு ஆதிநாதர் என்றும் பெயரால் வணங்கி கி.பி. 9ம் நூற்றாண்டில் ஆலயமும் எழுப்பியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. ராஜகேசரிவர்மன், குலோத்துங்க சோழன், பரகேசி வர்மன், ராஜேந்திர சோழன் ஆகியோரால் இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் கட்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
கிருபானந்த வாரியாரும் வழிபாடு :
இந்த வயலூர் முருகப் பெருமான் கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் இணைந்து, முருகப் பெருமான் இங்குள்ள ஈசனை வழிபடுகிறார் என்பது ஐதீகமாக உள்ளது. தனி சன்னதியில் வள்ளி - தெய்வானை சமேதராக காட்சி தருகிறார் வயலூர் முருகப் பெருமான். இந்த முருகப் பெருமானை கிருபானந்த வாரியரும் வழிபட்டுள்ளார்.
பரிகாரம் மற்றும் வழிபாடு :
திருமண தோஷம் மற்றும் தடைகள் உள்ளவர்கள், முதல் நாள் இரவே இங்கு வந்து தங்கி, மறுநாள் சக்தி தீர்த்தத்தில் நீராடி, முருகப்பெருமானை வழிபட்டால் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. ஆண்டு முழுக்க பக்தர்கள் இங்கு வந்து கூடி முடி இறக்குதல், காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், காது குத்தல், சஷ்டி விரதம் இருத்தல், ஆண்கள் அங்கபிரதட்சணம் செய்தல், பெண்கள் கும்பிடு தண்டமும், அடிப் பிரதட்சணமும் செய்வது என பல நேர்த்திக்கடன்கள் செய்கின்றனர்.