சங்க கால புகழ்கள் :
சங்க காலத்திலிருந்தே திருவரங்கம் கோயில் புகழ் பெற்றது. அதனால் 2000 ஆண்டுகளாக திருவரங்கம் விண்ணகரத்தில் வழிபாடு நடப்பது தெரிகிறது. சிலப்பதிகாரம் மதுரை காண்டம் காடுகண் காதையில் "விரிந்த அலைகளோடு கூடிய மிக பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில் திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவரும், நீல நிறம் கொண்டவருமாகிய திருமால், ஆயிரம் தலைகளுடைய ஆதிசேசன் என்னும் பாம்பணையாகிய பள்ளியின் மீது அழகுறச்சாய்ந்து கொண்டிருக்கும் தன்மை, நீல நிறமுடைய ஒரு மேகமானது பொன்மலையினை சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கின்றது" என வர்ணிக்கப்படுகிறது.
முதல் விருது பெற்ற கோயில் :
ஆசிய பசிபிக் மண்டலத்தில் உள்ள 10 நாடுகளில் உள்ள கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்புகள் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்த யுனஸ்கோ அமைப்பு, திருவரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு கலாச்சார பாரம்பரியம் போன்ற பழமை மாறாமல் பாதுகாத்ததற்கான விருதை 2017ம் ஆண்டில் வழங்கி சிறப்பித்தது. தமிழகத்திலேயே முதல் முறையாக இக்கோயிலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.