இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவில் வந்து வழிபட்ட சிறப்புவாய்ந்த தலமான இது, சோழநாட்டு தென்கரை கோவில்களில் 7வது ஸ்தலமாகும். அகத்தியர் முருகனிடம் ஞான உபதேசம் பெற்ற ஸ்தலமும் இதுவே. இங்கிருக்கும் பிரம்ம தீர்த்தம் 21 தலைமுறையில் செய்த பாவங்களையும் போக்கும் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ள தலமும் இதுவே.
தாருகாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தின் பலனால், தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினான். இந்திரனை தோற்கடித்து தேவலோகத்தை கைப்பற்றினான். தோல்வியுற்ற இந்திரன் பிரம்மனிடம் முறையட, அவர், தென்கயிலாயமான மணிக்கூட புரத்துப் பெருமானை வழிபடுமாறும், அப்போது ஒரு புதல்வன் தோன்றுவான் என்றும், அவனே அந்த தாருகாசுரனை அழிப்பான் என்றும் கூறினார்.
திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலமான இந்த எறும்பீஸ்வரர் கோவில் திகழ்கிறது. நாவுக்கரசர் ‘இன்பமும் பிறப்பும் இறப்பினொடு துன்பமும் உடனே வைத்த சோதியான்’ என்று பாடுகிறார். திருவாசகத்தில் மாணிக்கவாசகரோ ‘யானை முதலா எறும்பு ஈறாக ஊனமில் யோனியின்’ என்று புகழ்ந்து பாடுகிறார். இதேபோல் ஏராளமான பாடல்கள் இந்த கோவிலை பற்றியும், இறைவனை போற்றியும் பாடப்பட்டுள்ளன.
ஒரு சிறு குன்றின் மீது அமைந்து, பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த கோவிலில் சுமார் 45க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் பரகேசரிவர்மன், ராஜகேசரிவர்மன், 3ம் ராஜராஜசோழன், சுந்தரபாண்டியன் என்று பல்வேறு மன்னர்கள் திருப்பணிகள் செய்திருப்பது தெரியவந்துள்ளது. எறும்புகளுக்கும் அருள்புரிந்த இறைவன் எழுந்தருளிய தலமாதலால் இந்த ஊரும் திருவெறும்பூர் என்றே பெயர் பெற்றது.