வாய்ப்பு ஒருமுறை தான் வரும். அப்போதே அதை இறுக்கமாக பிடித்துக்கொள்ள வேண்டும். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் இத்தாலி நாட்டில் கைவிடப்பட்ட மூன்று வீடுகளை வெறும் 270 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். பேரம் பேசுவதில் நம்மூர் தாய்மார்களை யாரும் அடித்துக்கொள்ள முடியாது. ஆனால் நம்மூர் பெண்களையும் மிஞ்ச கூடிய வகையில் பேரம் பேசி சாதித்த ஒரு பெண்ணை தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம். இவர் இத்தாலியில் உள்ள மூன்று வீடுகளை வெறும் 270 ரூபாய்கு விலைக்கு வாங்கியுள்ளார்.
பிரேசிலைச் சேர்ந்த 49 வயதாகும் ரூபியா டேனியல்ஸ், 2019ம் ஆண்டு இந்த வீடுகளை வாங்கினார். இப்போதுதான் மூன்று வீடுகளையும் ஓரளவிற்கு புதுப்பித்து முடித்துள்ளார். சோலார் (சூரிய ஒளி தகடு) துறையில் பணியாற்றும் டேனியல்ஸ், மக்கள்தொகையை பெருக்குவதற்காக இத்தாலியில் மலிவு விலையில் வீடு கிடைப்பதாக கேள்விபட்டிருக்கிறார். இதை கேள்விப்பட்ட அடுத்த நிமிடமே களத்தில் இறங்கியுள்ளார்.
“இதை கேள்விப்பட்டதும் முதலில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவ்வுளவு கம்மியான விலைக்கு தருகிறார்களே, இது உண்மையாக இருக்குமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. இதுகுறித்து நிறைய ஆய்வு செய்து தகவல் சேகரித்தேன். உண்மை என்று தெரிந்ததும் மூன்று நாட்களுக்குள் என்னுடைய விமான டிக்கெட், ஒரு வாடகை கார், தங்குவதற்கு ஹோட்டல் என அனைத்தையும் புக் செய்து விட்டு வீட்டை வாங்க உடனடியாக கிளம்பினேன்” என ஆச்சர்யம் விலகாமல் கூறுகிறார் இந்த சான் பிரான்சிஸ்கோ நகரவாசி.
இப்பகுதியிலுள்ள வீடுகளின் விலையை கேட்டறிந்ததும் முஸுமெலிக்கு கிளம்பியுள்ளார் டேனியல். சிறிய நகரமான இங்கு வெறும் 10,000 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். இத்தாலியின் முக்கிய நகரமான சிசிலி நகரின் அருகில் உள்ளது இந்த ஊர். கொரோனா நோய்தொற்று உலகை தாக்குவதற்கு முன்பே, குறைந்து வரும் மக்கள்தொகை பிரச்சனையால் கடுமையான சிக்கலை சந்தித்து வந்தது இத்தாலி. வெறிச்சோடி காணப்பட்ட நகரத்தின் வீடுகள் யாவும் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்தன.
உதாரணத்திற்கு, 2019ம் ஆண்டு நகரத்தை புதுப்பிக்கும் முயற்சியாக சிசிலியன் நகரத்தில் உள்ள சம்புகா டி சிசிலியா ஊரில் உள்ள வீடுகள் ஒரு டாலருக்கும் குறைவான விலைக்கு விற்கப்பட்டன. அப்படியாவது பலர் இந்த ஊருக்கு வந்து குடியேற மாட்டார்களா. இந்நகரத்தில் உள்ள வீடுகள் எல்லாம் குறைந்த விலைக்கு கிடைத்தாலும், பாழடைந்து போன இந்த வீடுகளை புதுப்பிக்க எவ்வுளவு செலவு ஆகும் என்பதை யாரும் கூறுவதில்லை. எப்படியும் ஒரு வீட்டை புதுப்பிக்கவே நம்மூர் பணத்திற்கு ஏறக்குறைய 20 லட்சம் முதல் 74 லட்சம் வரை செலவாகும் என தெரிகிறது.
இந்த நாட்டில், தான் வாங்கிய வீடுகளை எப்படி புதுப்பிக்கலாம் என பெரிய திட்டமொன்றை வைத்துள்ளார் டேனியல்ஸ். தான் இங்கு வரும்போது மட்டும் தங்குவதற்காக ஒரு வீட்டை வைத்துக்கொண்டு, மற்ற இரண்டு வீடுகளையும் தன்னை இருகரம் விரித்து வரவேற்ற இந்த நகரத்தின் நலத்திற்காக அர்ப்பணிக்கவுள்ளார். ஒரு வீட்டை கலைக்கூடமாக மாற்றும் எண்ணம் இருப்பதாக கூறும் டேனியல்ஸ், மற்றொன்றை இந்நகரத்தில் வசிக்கும் மக்களுக்காக ஆரோக்கிய மையமாக மாற்ற முடிவு செய்துள்ளார். இந்த ஆரோக்கிய மையம் தான் அவருடைய மிகப்பெரிய கனவு திட்டம்.