நம்மில் பலருக்கும் மிக நீண்ட காலம் இளமையோடு வாழ வேண்டும் என்று ஆசை கண்டிப்பாக இருக்கும். ஆனாலும் நீண்ட காலம் வாழும் கொடுப்பினை என்பது மிக சிலருக்கே கிடைக்கும். அதிலும் அவர்களிடம் உங்களது ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்னவென்று கேட்டால், பலரும் பலவித முறைகளையும், பழக்க வழக்கங்களை பற்றியும் கூறுவார்கள். ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவதும், தினசரி உடற்பயிற்சி செய்வதுமே நீண்ட கால ஆயுளுக்கு உதவி செய்யும் என்று பலரும் கூறியுள்ளார்கள்.
ஆனால் UK -வை சேர்ந்த ஆலிவ் வெஸ்டர்மன்மேன் என்ற 100 வயது பெண்மணி தன்னுடைய ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தை கூறியுள்ளார். இது பலருக்கு ஆர்வத்தையும், வியப்பையும் ஒரு சேர உண்டாக்கி உள்ளது. தன்னுடைய வாழ்நாள் முழுவதுமே விசித்திரமான மனிதர்களோடு சந்திப்பை தவிர்த்ததும், அவ்வாறு சந்திக்க நேர்ந்தாலும் அவர்களிடம் பேசாமல் இருந்ததும் தான் தன்னுடைய நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்திற்கும் காரணம் என்று வியப்பிற்குரிய ஒரு பதிலை அந்த பெண்மணி அளித்துள்ளார்.
எழுத்தாளரும் பயணம் செய்வதில் ஆர்வமுடையவருமான தன்னுடைய கணவர் சாமுடன், ஆலிவ் உலகம் முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார். தன வாழ்க்கையின் பெரும் பகுதியை பயணம் செய்வதிலேயே அந்த பெண்மணி செலவழித்துள்ளார். தற்போது ஆலிவின் கணவர் உயிரோடு இல்லை. மேலும் இந்த தம்பதிக்கு குழந்தைகளும் யாரும் கிடையாது.ஆலிவ் நர்சரியில் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் வேலையை செய்து வந்தார். குழந்தைகளோடு நீண்ட காலம் பழகியதாலேயே மனதளவில் தான் இளமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் தான் தன்னுடைய நூறாவது பிறந்த நாளை தன்னுடைய குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சூழ அவர் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பிறந்தநாள் விழாவின் போது நடந்த கூட்டத்தில் தான் ஆலிவ் தன்னுடைய நீண்ட நாட்கள் வாழ்ந்ததற்கான ரகசியமாக, விசித்திரமானவர்களுடன் பேசுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். உங்கள் மனதை சந்தோஷமாக வைத்து கொள்ளும் விஷயத்தை செய்து வந்தாலே மனதளவில் எப்போதும் இளமையாக இருப்பீர்கள் என்று அவர் கூறியுள்ளார்.
“நம்மிடம் இருப்பதை வைத்து எளிமையாகவும் சந்தோஷமாகவும் இருக்க முயற்சி செய்வதே மனதளவில் நம்மை மகிழ்ச்சியாக வைக்கும். நான் வாழ்ந்த இந்த காலங்களில் என் வாழ்வின் பெரும் பகுதியை குழந்தைகளுடன் செலவழித்துள்ளேன். இதனாலேயே நான் மனதளவில் இன்னும் இளமையாக இருக்கிறேன். எனக்கு இப்போது நூறு வயது ஆகிவிட்டது என்பதை என்னால் இப்போது கூட நம்ப முடியவில்லை” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த பெண்மணி இயற்கையிலேயே மிகவும் நகைச்சுவை குணம் கொண்டவர் என பலரும் தெரிவித்துள்ளனர். மேலும்உலகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு தன்னுடைய அறிவை பல விதங்களில் வளர்த்து கொண்டுள்ளார் இந்த நூறு வயது இளம் பெண்மணி!