2023ன் தொடக்கத்திலேயே உலகளவில் 209 நிறுவனங்களை சேர்ந்த 60,000 பணியாளர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர். இந்த தகவலை கோவிட்-19 தொடர்பான தகவல்களை வைத்திருக்கும் இணையதளமான layoffs.fyi தெரிவித்துள்ளது. சமீபத்தில், மென்பொருள் நிறுவனங்களான, மைக்ரோசாப்ட் , அமேசான், ஸ்பாட்டிஃபை, ஐ.பி.எம், சாப் ஆகியவை தங்கள் நிறுவனங்களில் இருந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. எந்தெந்த நிறுவனங்கள், எத்தனை ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது என்பதை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
12,000 ஊழியர்களை நீக்கிய கூகுள் நிறுவனம் : 2023 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் பணிநீக்கம் குறித்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மின் அஞ்சலில் கூகுள் நிறுவனம், 12 ஆயிரம் பேர் வரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்து இருப்பதாக, சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிற நாடுகளில் உள்ளூர் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் காரணமாக பணி நீக்கம் செய்ய சில நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுந்தர் பிச்சை அந்த இ- மெயிலில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18000 ஊழியர்களை நீக்கும் அமேசான் : 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார மந்தநிலைக்கு முன்னதாக உலகளவில் சுமார் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக Amazon அறிவித்துள்ளது. இதனை அமேசான் CEO Andy Jassy தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுமார் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.
10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட் : மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா, கடந்த ஜனவரி 18 அன்று 10,000 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தார். பணி நீக்கத்திற்கான நோட்டீஸ் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொருளாதார சூழல் காரணமாக இந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக சத்யா நாதெல்லா குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது ஊழியர்களில் 5% குறைவானோர் அதாவது சுமார் 10 ஆயிரம் பேர் தங்கள் வேலையை இழந்துள்ளனர். வரும் மார்ச் மாத இறுதிக்குள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3000 பேரை வீட்டுக்கு அனுப்பும் ஜெர்மனியின் SAP : ஜெர்மனிய மென்பொருள் நிறுவனமான SAP இந்த ஆண்டு சுமார் 3,000 பணியார்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த நிறுவனத்தில் மொத்தம் 1,20,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 3,000 ஊழியர்களுக்கு வேலை பறிபோக உள்ளது. இந்த பணிநீக்க திட்டம் குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும், செலவுகளைக் குறைத்து கிளவுட் வணிகத்தில் கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.
3,900 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம் : அமெரிக்காவின் பிரபல சர்வதேச வணிக இயந்திரங்கள் கழகம் IBM அதன் பண இலக்குகளை அடையத் தவறியதால் 3900 பணியாளர்களை நீக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 1.5 சதவிகிதம் ஆகும். இது தொடர்பாக பேசிய ஐபிஎம் நிறுவன தலைமை நிதி அதிகாரி ஜேம்ஸ் கவானாக், எந்தெந்த துறைகள் பாதிக்கப்படும், முதல் சுற்று பணிநீக்கங்கள் எப்போது தொடங்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும், சில சொத்துகளை விற்பனை செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு ஐபிஎம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
10% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய விமியோ : வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான விமியோ தனது 11% ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள விமியோவின் தலைமை நிர்வாக அதிகாரி அஞ்சலி சுட், பொருளாதார மந்த நிலை சூழலில் விமியோ அதிக கவனம் செலுத்தி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
10% ஊழியர்களைக் குறைத்த சேல்ஸ்ஃபோர்ஸ் : சேல்ஸ்ஃபோர்ஸ் அதன் ஊழியர்களில் சுமார் 10% பணிநீக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய சேல்ஸ்ஃபோர்ஸின் இணை-தலைமை நிர்வாகி மார்க் பெனியோஃப் அனைத்து ஊழியர்களுக்கும் எழுதிய கடிதத்தில், தற்போது சவால் நிறைந்த சூழல் நிலவுவதாகவும், அதற்கு பொறுப்பேற்கும் விதமாக இந்த பணி நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆண்டின் தொடக்கத்திலேயே உலகம் முழுதும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்கள் வேலை இழந்துள்ளதால் வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.