தாய்லாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பாலியல் நோய் பரவல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்நாட்டு சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு முறைகளை கையாண்டு வருகிறது. தாய்லாந்தின் 15 முதல் 19 வயதினர் மற்றும் 20 முதல் 24 வயதினரிடையே syphilis, gonorrhoea ஆகிய பாலியல் நோய் பாதிப்பு பரவலானது அதிகம் காணப்படுகிறது.
பால்வினை நோய் அறிகுறிகள் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் வரலாம். இருவருக்கும் வெவ்வேறு விதமாக தென்படும். ஆண்களுக்கு ஆண் குறியில் புண், சிறுநீர் கழிக்கும்போது வெள்ளை படுதல், எரிச்சல், தோல் வெடிப்பு, கால்களுக்கு இடையே நெரிக்கட்டுதல், அடி வயிறு மற்றும் இடுப்பு வலி போன்றவை தென்படலாம். அதேபோல பெண்களுக்கு, அதிகப்படியான வெள்ளைப்படுதல், மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் வெள்ளைப்படுதல், துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல், பிறப்புறுப்பில் அறிப்பு மற்றும் எரிச்சல், காய்ச்சலுடன் அடி வயிற்றில் வலி போன்ற சில அறிகுறிகள் தென்படலாம். முறையற்ற மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதன் மூலமாக பரவும் இதுபோன்ற நோய்களை தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டுவரும் தாய்லாந்து சுகாதாரத்துறை, ஒரு விநோதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் : இந்தியா உள்பட உலகம் முழுவதும் வரும் 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த காதலர் தினத்தில் காதலர்கள் சந்தித்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறி கொள்வார்கள். மேலும் ஆட்டம், பாட்டம் என கோலாகலமாக கொண்டாடுவார்கள். காதலர் தினத்தை கோலாகலமாக கொண்டாட பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. ஹோட்டல்களிலும் அறைகள் முன்கூட்டியே புக் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் காதலர் தினத்தை கொண்டாட அரசாங்கமே வினோத திட்டம் ஒன்றை அறிவித்து அதற்காக தயாராகி வருகிறது.
இலவச ஆணுறைகளை வழங்கும் தாய்லாந்து அரசு : பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தின கொண்டாட்டத்தை ஒட்டி தாய்லாந்து அரசு சுமார் 9.5 கோடி ஆணுறைகளை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது. இதனால் இளைஞர்களிடையே பாலியல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதுடன், தேவையற்ற கர்ப்பம், பாலியல் நோய்களை தடுக்க முடியும் என கருதப்படுகிறது.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய தாய்லாந்து அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்தகங்கள், போன்ற இடங்களில் இலவச ஆணுறைகளை பெற்றுகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆணுறைகள் பல்வேறு அளவுகளில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். லூப்ரிகேட்டிங் ஜெல்லுடன் விநியோகம் செய்யப்படும் இலவச ஆணுறைகளை பெற விரும்பகிறவர்கள் ஆன்லைன் செயலி மூலம் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலவச ஆணுறைகள் எந்த இடத்தில் வழங்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். மேலும் விருப்பமில்லா கருத்தரிப்பு மற்றம் பாலியல் நோய் பரவலை தடுக்கவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தாய்லாந்து அரசின் இந்த முடிவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துவரும் நிலையில் ஒரு சிலர் நெகடிவ் கமெண்டுகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.