கோலெட் மேஸ் என்ற பெண்மணி ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக பியானோ வாசித்து வருகிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா...? ஆம், உண்மை தான். இவருக்கு சமூக வலைத்தளத்தில் எக்கச்சக்கமான ஃபாலோவர்களும் இருக்கிறார்கள். இவர் முதல் உலகப் போர் தொடங்குவதற்கு முன் ஜூன் 1914-ல் பிறந்தார். அப்போது அவருக்கு மிகவும் பிடித்தமான கிலாட் டெபுசி என்ற பியானோ இசைக்கலைஞர் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கோலெட் மேஸ் என்ற இவர் ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் பயிற்சி செய்வாராம். தற்போது அவர் தனது ஏழாவது ஆல்பமான "108 இயர்ஸ் ஆஃப் பியானோ" என்பதை வெளியிட தயாராக உள்ளார். சியன் ஆற்றின் அருகில் இருக்கும் தனது அபார்ட்மெண்ட்டின் லிவ்விங் ரூமில் உள்ள மூன்று பியானோக்களுக்கு இடையே மெதுவாக நடைபோடும் மேஸ் இன்றளவிலும் உற்சாகமாக இருந்து வருகிறார். இது குறித்து பேசிய அவர்,
"யார், நானா? இளமையாகவா இருக்கிறேன்," என்று சிறு புன்னகையுடன் கேட்கிறார். "வயது பற்றி எனக்கு பெரிய அபிப்பிராயம் கிடையாது. எப்போதுமே இளமையாக இருக்கக்கூடிய பல நபர்கள் உள்ளனர். நாம் செய்யும் விஷயங்களே நம்மை இளமையாக காட்டும். மேலும் எதன் மீதும் பெரிய ஆசையின்றி வாழும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்று அவர் கூறினார். தனது வாழ்க்கையின் பெரும் பாதியில் பியானோ கற்பிப்பாளராக இருந்து வருகிறார் மேஸ். அவர் தனது 100-வது வயதை எட்டியபோது தான் தனக்கான ரசிகர் பட்டாளத்தை ஃபேஸ்புக் மூலமாக பெற்றுள்ளார்.
தற்போது வரை இவரின் தொடர்ச்சியான ஆரோக்கியம் கண்டும், பிரன்ச் நாட்டின் பாரம்பரிய உணவுகளான வைன், சீஸ் மற்றும் சாக்லேட் போன்றவற்றை இன்றளவிலும் விடாமல் உண்டு வருவதை கண்டும் ஆச்சரியப்படும் பலர் உள்ளனர். "அவர் பிறருக்கு மன வலிமையை கொடுக்கக்கூடியவர். அதனால் தான் அவரைத் தேடி இத்தனை வெற்றிகள் வந்து கொண்டிருக்கிறது," என்று பத்திரிக்கையாளராக இருந்து வரும் மேஸின் மகன் ஃபாப்ரிஸ் மேஸ், தனது தாய் குறித்து கூறினார். மேலும் 100 வயதிற்கு மேல் ஆல்பம் வெளியிடும் மிகச் சிலரில் தனது தாயும் ஒருவர் என்ற பெருமை குறித்தும் ஃபாப்ரிஸ் பேசினார்.
முதலாம் உலகப் போரின் போது ஜெர்மனி பயன்படுத்திய மிகப்பெரிய கேனன் "பிக் பெர்த்தா"- வின் அதிரும் சத்தம் இன்றும் அவருக்கு நினைவுள்ளதாக கூறுகிறார். ஆனால் அவர் கொண்டுள்ள பெரும்பாலான நினைவுகள் தனது பியோனோவைப் பற்றியது தான் என்று தெரிவித்தார். "நான் சிறுமியாக இருந்தபோது, ஆஸ்துமாவால் அவதிப்பட்டேன். அப்போது எனது தாய் என் பியானோ பயிற்சியாளருடன் சேர்த்து பியானோ இசைப்பார். அது எனக்கு மிகவும் அமைதியான சூழலை அளித்தது. " என்று கூறினார்.
மேஸ் தனக்கு ஐந்து வயதாக இருக்கும் போதிலிருந்து பியானோ வாசிக்க ஆரம்பித்தார். மேலும் தனது பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றாலும் கூட, ஈகோல் நார்மலே டி மியூசிக் டி பாரிஸில் (Ecole Normale de Musique de Paris) அவருக்கு இடம் கிடைத்தது. அதில் பிரபலமான ஆல்ஃப்ரெட் கார்டாட் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உடலில் உள்ள தசைகளுக்கு ஓய்வு அளிப்பதன் பொருட்டு பியோனோ வாசிப்பதில் கார்டாட் வல்லவர்.