பிரேசிலை சேர்ந்த மாடலிங் கலைஞரான ஆர்தர் ஓ.உர்ஸோ, சில மாதங்களுக்கு முன்பாக உலக அளவில் டிரெண்டிங்கில் இருந்தார். அவருக்கு 9 மனைவிகள் என்பதே இதற்கு காரணம். ஒரு தார மண வாழ்க்கையில் ருசிகரம் கிடையாது என்றும், சுதந்திரமாக பல காதல்களை செய்ய வேண்டும் என்றும் அப்போதைய சூழ்நிலையில் ஆர்தர் உர்ஸோ கூறியிருந்தார். அவர் தொடர்பான செய்தி உலகெங்கிலும் எந்த அளவுக்கு பரவியதோ, அந்த அளவுக்கு நெகட்டிவ்வாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, உலகெங்கிலும் உள்ள சமூக வலைதள பயனாளர்கள் பலர் திட்டி தீர்த்தனர். தமிழகத்திலும் கூட பல தளங்களில் வெளியான செய்திகளுக்கு கீழே, “சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது” என்ற ரேஞ்சுக்கு பலர் விமர்சனம் செய்திருந்தனர்.
அதேசமயம், உர்ஸோவின் காதல் கொள்கையை ஒருசிலர் பாராட்டவும் செய்தனர். ஒரு மனைவியுடன் ஒற்றுமையாக வாழ்வதே கடினமாக இருக்கும் இன்றைய சூழலில், 9 பேரை அனுசரித்து ஒரே வீட்டில் வாழ்வதெல்லாம் தனித்திறமை என்று குறிப்பிட்டனர். ஆர்தர் உர்ஸோவின் முதல் மனைவி பெயர் லுயானா கஸாகி ஆகும். அவர், கணவரின் மற்ற 8 மனைவிகளை ஒருங்கிணைந்து தேவாலயத்தில் ‘சங்கமம்’ நிகழ்ச்சியை வேறு நடத்திக் காட்டினார். அந்தப் படமும் வைரல் ஆனது.
பாராட்டு, விமர்சனம் என எதையும் கவனத்தில் கொள்ளாமல் தன்னுடைய வாழ்க்கையில் உர்ஸோ கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாக, பாலியல் டிப்ஸ்களை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டு வரும் வீடியோக்களுக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கின்றது. அதை வைத்து மாதம் 50 ஆயிரம் யூரோ அளவுக்கு சம்பாதித்து வருகிறார்.
வீட்டில் திரும்பும் திசையெல்லாம் மனைவிகள், காதல், குதூகலம் என்று சென்று கொண்டிருந்த ஆர்தர் உர்ஸோவின் வாழ்க்கையில் தற்போது புயல் வீச தொடங்கியிருக்கிறது. அதாவது, கடந்த ஆண்டு 9ஆவது மனைவியை திருமணம் செய்தபோதே, அது வெறும் கணக்கிற்காக செய்யப்பட்டதாம். இதைத்தொடர்ந்து, உடனடியாக அவர் விவாகரத்து செய்தார். சோதனைகள் இத்தோடு நிற்கவில்லை. மேலும் 4 மனைவிகள் அடுத்தடுத்து உர்ஸோவை விவாகரத்து செய்துள்ளனர். தற்போது 4 மனைவிகள் மட்டுமே ஆர்தர் உர்ஸோவுடன் இருக்கிறார்களாம்.
ஆர்தர் உர்ஸோவின் மனைவிகளில் சிலர் விவாகரத்து செய்வதற்கு அக்கம், பக்கத்தினரின் தொந்தரவுகளும் ஒரு காரணமாக இருந்துள்ளது. அதாவது, இவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் தருணங்களில் சக மக்கள் கிண்டல், கேலி செய்து வம்பு இழுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். உர்ஸோ மற்றும் அவரது மனைவிகளுக்கு ஆரம்பத்தில் இது அதிர்ச்சிகரமானதாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசி, இந்தப் பிரச்சினையை கண்டு கொள்ளாமல் கடந்து சென்றுவிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கின்றனர்.ஆனாலும் பொதுமக்களின் தொடர் நெருக்கடி மற்றும் வாழ்க்கையில் ஏற்பட்ட சின்ன, சின்ன கருத்து வேறுபாடுகள் காரணமாக 4 மனைவிகள் தற்போது விவாகரத்து செய்துள்ளனர்.
மொத்தம் 5 மனைவிகள் விவாகரத்து செய்துள்ள நிலையில், தற்போது புதிதாக யாரையும் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று ஆர்தர் உர்ஸோ கூறியிருக்கிறார். ஆனால், எண்ணற்ற மனைவிகள் இருக்க வேண்டும் என்பதே எப்போதும் தன்னுடைய எண்ணம் என்றும், பல மனைவிகளுடன் ஒன்றாக தூங்கும் அளவுக்கு வீட்டில் பெரிய மெத்தை மற்றும் இதர வசதிகள் இருக்கின்றன என்றும் ஆர்தர் உர்ஸோ குறிப்பிடுகிறார்.