மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான உறவு பரஸ்பரம் நன்மை அளிக்ககூடியது. கற்காலம் தொட்டே விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடேயே நல்ல உறவு இருந்துள்ளது. தனிமையில் இருந்த மனிதனுக்கு காவலாகவும் தோழனாகவும் விலங்குகள் இருந்துள்ளன; இன்றும் இருக்கின்றன. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இருக்கும் இந்த இணக்கம் அவைகளின் உடல்நலத்திலும் ஆரோக்கியத்திலும் முக்கியமான தாக்கத்தைச் செலுத்தும்.
இப்படியான ஒரு துயர சம்பவம் ஐரோப்பாவில் சமீபத்தில் நடந்துள்ளது. ஐரோப்பாவின் 'ஜோ எக்ஸோடிக்' (Joe Exotic) என பிரபலமாக அறியப்படும் ஜோ என்பவர், தன்னுடைய உயிரியல் பூங்காவில் தான் வளர்த்த மிருகங்களாலேயே கொல்லப்பட்டுள்ளார். விலங்குகளால் கடுமையாக தாக்கப்பட்டு இறந்திருக்கலாம் என அங்கிருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் உறுதிப்படுத்துகின்றன. ஸ்லோவோகியாவின் ஆஸ்கெர்டா ஊரைச் சேர்ந்த ஜோ விலங்குகளுக்காகவே உயிரியல் பூங்காவை கட்டியுள்ளார்.
தற்போது அவர் வளர்ப்பு மிருகங்களாலேயே கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். விலங்குகளால் தொடர்ச்சியாக தாக்கப்பட்டதோடு அருகில் இருக்கும் காட்டு விலங்குகளால் அவரது உடல் உண்ணப்பட்டிருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. மே 16ம் தேதி ஜோ இறந்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களாக ஜோவை காணவில்லை என்ற சந்தேகம் அருகில் வசிப்பவர்களுக்கு இருந்துள்ளது.
இதுகுறித்து விசாரித்த பிறகுதான், அவரது உயிரியல் பூங்காவில் எலும்புகள் கிடைத்துள்ளன. முதலில் அது இறந்துபோன விலங்குகளின் எலும்புகளாக இருக்கும் என நினைத்துள்ளார்கள். அப்புறம் தான் அங்கு கிடைத்த இரண்டு, நான்கு எலும்புகள் ஜோவின் உடலை அடையாளம் கண்டுபிடிக்க உதவின. சிங்கத்திற்கு உணவிடுவதற்காக உள்ளே சென்ற போதுதான் இச்சம்பவம் நடந்துள்ளது. ஜோவின் சில எலும்புகளை தவிர்த்து மற்ற அனைத்தும் துண்டு துண்டாக எடுத்துச் செல்லப்பட்டன.
விலங்குகளை வளர்க்கும் உரிமத்தை ஏற்கனவே அரசாங்கத்திடம் பெற்றுள்ளார் ஜோ. ஆனால் இந்த உரிமம் 2019ம் ஆண்டோடு காலாவாதி ஆகிவிட்டது. ஜோவும் அதை புதுப்பிக்கவில்லை. மற்றவர்களோடு சகஜமாக பேசி பழகாமல் இருப்பதோடு தான் வளர்க்கும் விலங்குகளுக்கும் சரியாக உணவளிப்பதில்லை என அவரது வீட்டில் அருகில் வசிப்பவர்கள் கூறியதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பும் ஜோ வளர்க்கும் விலங்குகள் அக்கம்பக்கத்தில் உள்ள மக்களை தாக்கியுள்ளன. 2019ம் ஆண்டு ஜோ வளர்க்கும் விலங்குகளிடம் கனிவாக நடந்து கொள்ளும் பெண் ஒருவரையும் இங்குள்ள விலங்குகள் தாக்கியுள்ளது. தற்போது இங்குள்ள விலங்குகள் அனைத்தும் விலங்குகள் நல பராமரிப்பாளர்களின் கண்காணிப்பில் இருக்கிறது..