தங்கம், வைரம், வெள்ளி, பிளாட்டினம் என விலையுயர்ந்த நகைகளை விரும்பாதோர் யாரும் இருக்கமாட்டார்கள். குறிப்பாக வைரம் என்றாலே சிலருக்கு அலாதிப்பிரியாமாக இருக்கும். அதுவும் தனித்துவமான டிசைன்களில் வரக்கூடிய சூரத் நகைகள் என்றால் சொல்லவே தேவையில்லை. போட்டி போட்டுக்கொண்டு அனைவரும் வாங்குவார்கள். இப்படி இந்தியாவிலேயே வைரத்திற்கு புகழ்பெற்ற சூரத் நகரத்தில் வைரத்தில் வைர பற்கள் அமோக விற்பனையாகிறது. இதோ வைர பற்களின் சிறப்பம்சங்கள் என்ன? என்பது குறித்து நாமும் இங்கே தெரிந்துக்கொள்வோம்..
சூரத் வைர பல் செட் : முன்பெல்லாம் தங்க நகைகளில் தான் பல்செட்கள் விற்கப்படும். ஆனால் தற்போது வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக வைரக்கற்கள் பதித்த பல்செட்டுகள் தற்போது டிரெங்கில் உள்ளது. சூரத்தில் தயாரிக்கப்படும் வைரப்பற்களில் 16 பற்கள் உள்ளன. மேல் தாடையில் எட்டு மற்றும் கீழ் தாடையில் எட்டு என மொத்தம் 16 பற்கள் உள்ளன. இதில் தங்கம் மற்றும் வெள்ளியைத் தவிர சுமார் 2,000 வைரங்களைப் பயன்படுத்துகிறது.
மற்ற மோதிரம், நெக்லஸ் போன்ற நகைகளைப் போன்று பார்ப்பதற்கு ஜொலிப்புடன் தெரியும். இதனால் தான் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பற்களின் வடிவம் மற்றும் டிசைன்கள் அமைக்கப்படுகிறது. குறிப்பாக பிஸ்டல், ஏகே – 47 ரக துப்பாக்கி, பட்டாம்பூச்சிகள் போன்ற டிசைன்களிலும் பற்கள் வடிவமைக்கப் படுகிறது. இருந்தப்போதும் சாதாரணமாகப் பயன்படுத்தும் பற்களைப் போலவே இந்த வைர கற்கள் கொண்ட பற்களையும் எந்தத் தொந்தரவும் இன்றி கழற்றி அணிய முடியும்.
வைர பற்களின் விலை : வெள்ளி மற்றும் மோன்சோனைட் வைரத்தால் செய்யப்பட்ட 16 பல் கொண்ட ஒரு செயற்கைப் பற்களின் விலை சுமார் ரூ.1 லட்சமாகும். தங்கம் மற்றும் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைரத்தால் செய்யப்பட்ட ஒரு செயற்கைப் பல்லின் விலை ரூ.5 லட்சம் வரை இருக்கும். தங்கம் மற்றும் வைரத்தால் செய்யப்பட்ட செயற்கைப் பற்களின் விலை ரூபாய் 25 முதல் 40 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது.
ஆர்வத்துடன் வாங்கும் வெளிநாட்டினர் : இந்தியர்கள் மட்டுமில்லாது, வெளிநாடுகளிலும் இதுப்போன்ற வைர பற்களுக்கு அதிக கிராக்கி உள்ளது. இந்த பற்களை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் முதலில் தங்களது செயற்கை பற்களின் அளவை அனுப்பி வைக்க வேண்டும். இதை வைத்து செயற்கைப் பற்களுக்கு POP தளம் தயார் செய்யப்படுகிறது .
பின்னர் செயற்கைப் பற்களின் சட்டகம் தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்டு, அதில் வைரம் பொருத்தப்படும். பின்னர் இந்தப் பற்கள் வெவ்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்படுகின்றன. சில வாடிக்கையாளர்கள் வைரங்களுக்குப் பதிலாக பற்களில் தங்கள் சொந்த உருவம் அல்லது பெயரை விரும்புகிறார்கள். எனவே அவர்கள் விரும்பும் பற்செட்டுளும் செய்யப்படுகிறது.