திருவண்ணாமலை அடுத்த சொரகொளத்தூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பொற்குணம், மருத்துவாம்பாடி, கமலபுத்தூர், கருத்துவம்பாடி, கரிங்கல்பாடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக திருவண்ணாமலையை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவரை பள்ளிக்கல்வித்துறை வேறு பள்ளிக்கு நேற்று இரவு பணி மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன் பேரில் மாற்றம் செய்யப்பட்ட பள்ளிக்கு ஆசிரியர் கணேஷ் பாபு சென்று விட்டார்.
கணேஷ் பாபு, பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு சம்பந்தமான பயிற்சிகளை அன்பு கலந்த அக்கறையுடன் அளித்து, அவர்களை மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வைத்து பரிசு பெற செய்தார் என்றும், சொரக்குளத்தூர் என்ற கிராமமே விளையாட்டால் மேம்பட்டது என்றும் கிராமவாசிகளும் பள்ளி மாணவ மாணவிகளும் தெரிவித்தனர்.