திருப்பூர் - வந்தாரை வாழவைக்கும் மாநகர் என்று அனைவரும் அறிந்ததே ! சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக படித்தவர், படிக்காதவர் என அனைத்து தரப்பினருக்கும் வாழ்வளிக்கும் நகரமாக திருப்பூர் விளங்குகிறது. இங்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து வந்து இங்கே தங்கி பணிபுரிபவர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.
திருப்பூருக்கு குட்டி ஜப்பான் என்ற செல்ல பெயரும் உண்டு. காரணம், இங்கு 24 மணி நேரமும் வருடத்தில் 365 நாட்களும் வேலை இருந்து கொண்டே இருக்கும். இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகளுக்கு வெளிநாட்டு சந்தைகளில் மிகப்பெரிய மதிப்பு உண்டு எனவே திருப்பூர் மாவட்டமானது மிகப்பெரிய அன்னிய செலாவணியை ஈட்டுகின்றது.
ஆனால் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பொருளாதார மந்த நிலை, வேலையின்மை போன்ற காரணங்களால் நிறைய மக்கள் திருப்பூரில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்றனர். மேலும் நூல் விலை உயர்வு காரணமாக பனியன் நிறுவனங்கள் தங்களது உற்பத்திகளை குறைத்துக் கொண்டனர். இதனால் பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்துள்ள சிறு குறு தொழில் செய்யும் நிறுவனங்களில் பணிபுரியும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
வெளிமாநில தொழிலாளர்கள் அடைக்கலம்:
திருப்பூரை நம்பி வந்த பிற வெளி மாநில தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக இங்கேயே தங்கி விட்டனர். தூய்மை பணியாளர்களாகவும், ஓட்டுனர்களாகவும், பெட்ரோல் பங்குகளில் பணிபுரிவது, மருத்துவமனைகளில் பணிபுரிவது , செக்யூரிட்டிகளாக பணிபுரிவது என கிடைத்த வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
அவ்வாறு திருப்பூர் அங்கேரி பாளையம் அருகில் உள்ள வெங்கமேடு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட வெளிமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்தினருடன் குடிசை போட்டு வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் திருப்பூர் மாநகராட்சி சார்பில் விடப்பட்ட டென்டரின் கீழ் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணிபுரிபவர்களாக உள்ளனர். ஊருக்கு வெளியே வெங்கமேடு பகுதியில் தீப்பெட்டிகளைப் போன்று தகரங்களை வைத்தோ அல்லது தார்ப்பாய்களை வைத்தோ தங்களது குடிசைகளை அமைத்துக் கொண்டு எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.
இது குறித்து அங்கு வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் கூறியதாவது:-
எங்கள் மாநிலங்களில் வேலையின்மை காரணமாக நாங்கள் வாழ்வாதாரத்திற்காக வேறு மாநிலங்களை தேடி செல்கிறோம். அவ்வாறு கடந்த சில வருடங்களாக எங்களை வாழ வைப்பது தமிழகம் தான். இங்குள்ள பெரும்பாலானோர் ஆந்திரா, தெலுங்கானா ,கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களே.
நாங்கள் எங்கள் மாநிலங்களில் கட்டிட வேலை, ஓட்டுநர், விவசாய கூலி என்று சின்ன சின்ன வேலைகளையே நம்பி செய்து வந்தோம். ஆனால் எங்கள் வாழ்வாதாரத்திற்கும் எங்கள் பொருளாதார தேவைக்கும் அவை சரிப்பட்டு வராததால் நாங்கள் தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து வந்தோம். இங்கு எங்களுக்கு என காண்ட்ராக்டர்கள் உள்ளனர் அவர்கள் எங்கள் மாநிலத்திற்கே வந்து ஆறு மாதம் ஒரு வருடம் என்று ஒப்பந்தத்தின் அடிப்படையில் எங்களை அழைத்து வருவர்.
இங்கு எங்களுக்கு துப்புரவு பணிகள் செய்வதற்கு தேவையான வாகனங்கள் துப்புரவு கருவிகள் என அனைத்தும் காண்ட்ராக்டர்கள் மூலமாக வழங்கப்படுகின்றது. மேலும் அவர்களே எங்களுக்கு குடிசை அமைக்க இடம் கொடுத்துள்ளனர். இங்கு எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான தண்ணீர், கழிவறை வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆனாலும் மழைக்காலங்களில் இருப்பதற்கு ஏதுவான சூழல் இல்லாமல் உள்ளது. சாக்கடை மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் அருகிலேயே இருப்பதால் விஷ பூச்சிகள், கொசுக்கள் மற்றும் ஈக்களின் தொல்லை அதிகமாக உள்ளது .இதனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகின்றது .
இதுகுறித்து அவர்களை அழைத்து வந்த காண்ட்ராக்டர் கூறியதாவது:-
வாரத்திற்கு ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்படுகின்றது. மாதம் ஒரு முறை சம்பளம் கொடுக்கப்படுகின்றது. தினமும் காலையில் 5 மணிக்கு புறப்பட்டால் சுற்று வட்டாரத்தில் உள்ள வீடுகளில் குப்பைகளை சேகரித்து குப்பை கிடங்கில் கொட்டி மாலை 6:00 மணிக்கு வீடு திரும்புகின்றனர். தீபாவளி மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் அவர்கள் சொந்த மாநிலத்திற்கு சென்று வருகின்றனர் .மேலும் இங்கு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என்றார்.
எங்களின் வருமானம் அடிப்படை செலவுகளான உணவு, உடை தேவையை பூர்த்தி செய்யவே போதுமானதாக உள்ளதால் எங்களின் குழந்தைகளுக்கு கல்வி தர முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம். இதனால் நாங்கள் இங்கு பணிபுரியும் வரை அரசாங்கம், எங்களது குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியினையாவது கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
5, 6 வயது குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது, வீட்டை பெருக்குவது என அவர்களின் சிறிய உலகத்திற்குள்ளே மாட்டிக் கொண்டு நிற்கின்றனர். இவ்வாறு சென்றால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். கல்வியறிவு இல்லை எனினும் அடிப்படை பண்புகளை கற்றுக் கொடுக்கவாவது சமூக ஆர்வலர்கள் அல்லது அரசாங்கம் முன் வந்து ஒரு ஆசிரியரை அவர்களின் பகுதிக்கு அனுப்ப வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.