தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மைசூரில் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக இங்கு நடைபெறும் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் திருவிழா மிகுந்த கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. தற்போது கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி பக்தர்கள் பங்கேற்கும் விதமாக தசரா திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விரதத்தை மேற்கொள்ள காப்புகள் கட்டிகொண்டனர். ஆண்டுதோறும் தசரா திருவிழாவில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது நெல்லை, தென்காசி உள்பட ஏராளமான மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் மாலை அணிந்து காப்புகட்டி விரமிருந்து கோவிலுக்கு வருவார்கள்.
இந்த ஆண்டும் திருவிழா களைகட்டி வருகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக விநாயகர், முருகன், சிவன், பார்வதி, மீனாட்சி, காளி, சுடலைமாடன் உள்ளிட்ட தெய்வ வேடங்களிலும், போலீஸ், செவிலியர், மனநலம் பாதிக்கப்பட்டவர் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து கொண்டு ஊர் ஊராக சென்று பொதுமக்களிடம் காணிக்கை பெற்று பின்னர் தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தின்போது குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் ஏராளமான இடங்களில் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை தொடங்கியுள்ளனர். நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள ஒரு குழுவை சேர்ந்த மாலை அணிந்து காப்பு கட்டிய பக்தர்கள் தாங்கள் வேண்டிக்கொண்டது படி காளி, மீனாட்சி, பார்வதி, அனுமன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை பெற தொடங்கியுள்ளனர்.