தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் 136 அடியை நெருங்கியது. தொடர்ந்து கேரளாவில் தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழையால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால் ரூல்கர்வ் அட்டவணை நடைமுறைப்படுத்தப்பட்டு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டது.
விநாடிக்கு 1,500 முதல் இரண்டாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத்தொடங்கியது. இதனிடையே தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கொட்டக்குடி, வராக நதி மற்றும் மூல வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கன மழை பெய்தது.
தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 68.5அடியை எட்டியதும் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69அடியானதும் இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையின் 7மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்படும். எனவே பொதுமக்கள் யாரும் குளிப்பதற்கோ துணி துவைப்பதற்கோ வைகை ஆற்றின் கரையோரம் செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.