1895ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி, அப்போதைய மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் முல்லை பெரியாறு அணையை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னிகுவிக் தலைமையில், 75 இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது.
அதன்படி முல்லை பெரியாறு அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்க ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில், பென்னிகுவிக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று, தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டுவந்து சொந்த செலவில் இந்த முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு நீராதாரமாக திகழ்கிறது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கை தேனி மாவட்ட மக்கள் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களும் மிகுந்த அன்போடு மரியாதை செலுத்துகின்றனர்.