தஞ்சாவூருக்கு அருகில் இருக்கும் திருக்கருகாவூரில் அருள்பாலிக்கிறாள் கர்ப்பரட்சாம்பிகை. கருவுற்ற பெண்களின் பேறுகாலத்தில், அவர்களையும் அவர்களுக்குள் இருக்கிற கருவையும் காத்து பின்னர், சுகப்பிரசவமாக்கி அருளும் அன்னை என பக்தர்கள் போற்றுகின்றனர். இங்கிருக்கும் சிவபெருமான் முல்லைவனநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
இந்த கோவில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த அம்பாளுக்கு “கரும்பணையாள்” என்ற பெயரும் உண்டு. பிரம்மன் ஆணவம் கொண்டதால் அவரின் படைப்பு தொழில் தடைப்பட்டது. அப்போது, இந்த தலத்திற்கு வந்து பிரம்ம தீர்த்தம் ஏற்படுத்தி நீராடி, இங்கிருக்கும் முல்லை வன நாதரை பூஜித்ததால் மீண்டும் படைப்பு தொழில் கைவரப்பெற்றார் என்கிறது தல வரலாறு.
சுவர்ணகரன் என்பவர் தான் செய்த தீய செயல் காரணமாக, பேயுரு கொண்டான். கார்க்கிய முனிவரால் இத்திருத்தலத்தில் திருவாதிரை நாளில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி தனது பேயுருவத்தை நீங்க பெற்றான். கௌதமரிடம் புகலடைந்த முனிவர்களின் சூழ்ச்சியால் பசுக்கொலை புரிந்த பாவத்திற்கு ஆளானார். போதாயனார் முனிவரின் சொற்படி நீராடி ஒரு லிங்கத்தை வைத்து பூஜித்தால் பசு கொலைப்பழி நீங்கியது.
எனவே, இங்கு கௌதமேஸ்வரர் என்ற பெயருடன் அம்மன் சன்னதியில் ஒரு தனிக்கோவில் உள்ளது. இந்த திருக்கருகாவூர், பெண்கள் அனைவரும் வணங்கி வழிபடவேண்டிய திருத்தலமாக இருந்து வருகிறது. திருமணத்தடையால் கலக்கம் அடைந்தவர்கள், கர்ப்பரட்சாம்பிகை கோவிலில், நெய்யால் மெழுகி கோலமிடும் பிரார்த்தனை செய்வது நல்பனை அளிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, வேண்டி கொண்டால், மணமாலை விரைவில் தோளில் ஆடும், மாங்கல்ய பலமும் கிடைக்க பெறுவார்கள் என்றும் நம்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்று ஏங்கி தவிப்பவர்கள், இங்கு வந்து வேண்டிக்கொண்டால் விரைவில் குழந்தை பாக்கியம் பெற்று மகிழ்வார்கள் என்று இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
மேலும், கருவுற்ற தாய்மார்கள் சுகப்பிரசவம் வேண்டு வருகின்றனர். அவர்களுக்கு அம்பாளின் திருப்பாதத்தில் வைத்து அர்ச்சித்து கொடுக்கப்படும் எண்ணெய் மகத்துவம் நிறைந்தது என்று சொல்கின்றனர். கருவுற்றவர் ஒன்பதாம் மாதம் தொடங்கியதும், நாள்தோறும் இந்த எண்ணெய்யை வயிற்றில் தடவி வந்தால், எந்த சிக்கலும் இல்லாமல் சுகப்பிரசவம் நிகழும் என்றும் குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.
கருவுற்ற பெண்கள் தங்களை பெற்ற தாயிடம் சொல்லுவதைபோல், இந்த அன்னையிடம் சொல்லி முறையிட்டு வேண்டி கொள்கின்றனர். அவர்களுக்கு சுகப்பிரசவம் அருளி தாயையும், சேயையும் அம்பிகை காத்தருள்வாள் என்கின்றனர். குழந்தை பிறந்தவுடன் தொட்டில் கட்டி, துலாபாரம் செய்கின்றனர். இங்கே அர்ச்சனை செய்து கொடுக்கும் விளக்கெண்ணெயை பக்தர்கள் வாங்கி சென்று தங்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்கின்றனர்.