இந்த மலைமீது ஏறிச் செல்ல சுமார் 544 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுக்கள் வழியாக ஏறிச் சென்றால் திருமலைக்குமரன் கோவிலை சென்றடையலாம். வழியில் இடும்பனுக்கும், தடுவட்ட விநாயகருக்கும் தனிக் கோவில் உள்ளது. கோவிலின் வடக்கு பிரகாரத்தில் தனிக் கோவிலில் வடக்கு திசை நோக்கி காட்சியளிக்கும் தில்லைக் காளி அம்மன் இந்த தலத்தின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறார். மலை மீது வாகனங்களில் செல்வதற்கு ஏற்றவாறு சாலை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு நோக்கிய கருவறையில் மூலவர் திருமலைக்குமரன் நான்கு கரங்களுடன் மேல் வலது கரத்தில் சக்தி ஆயுதம் ஏந்தியும், மேல் இடது கரத்தில் வச்சிராயுதம் ஏந்தியும், கீழ் வலது கரத்தை அபய முத்திரை காட்டியும், கீழ் இடது கரத்தை சிம்ம கர்ண முத்திரை காட்டியும், வேலும், சேவற் கொடியும் ஏந்தியபடி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
பசுமை நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி, தனியாக அமைந்திருக்கு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது. இந்த கோவில், அந்த மலையின்மீதிருந்து பார்த்தால், சுற்றியுள்ள பகுதிகளில் தென்னை மரங்களும், இயற்கையின் அழகும், உடலை உரசிச் செல்லும் குளிர் காற்றும் உற்சாகத்தை கொடுக்கும். இது சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாகவும் திகழ்கிறது.
இங்கிருக்கும் முருகன் சிலையின் மூக்கில் சிறிய காயம் போன்று இருப்பதைப் பார்க்கலாம். இது மண்ணில் புதைந்திருந்த சிலையை தோண்டி எடுத்தபோது ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், இந்த பகுதியில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு மூக்கன், மூக்காண்டி என்ற பெயர்களும், பெண் குழந்தைகளுக்கு மூக்கம்மாள் என்ற பெயர்களும் வைக்கின்ற வழக்கம் உள்ளது. இதேபோன்று, குழந்தைகளுக்கு இங்கிருக்கும் முருகப் பெருமானை வேண்டிக்கொண்டு மூக்கு குத்தும் வழக்கமும் பின்பற்றப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
திருமலைமுருகன் பிள்ளைத்தமிழ், திருமலையமக அந்தாதி, திருமலைமுருகன் குறவஞ்சி, திருமலை முருகன் நொண்டி நாடகம், திருமலை கறுப்பன் காதல், திருமலை முருகன் அந்தாதி, திருமலைக் குமாரசுவாமி அலங்கார பிரபந்தம், திருமணிமாலை, திருத்தாலாட்டு போன்ற நூல்கள் இந்த தலத்தில் உள்ள முருகப்பெருமானை போற்றி பாடப்பட்டுன்ன.
இந்த திருமலைக் குமரன் திருக்கோவில் சிறப்புற்று விளங்குவதற்கு இங்கு வாழ்ந்த பெண் துறவியான சிவகாமி பரதேசி அம்மையார் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அச்சன்புதூரில் செல்வச் செழிப்பாக பிறந்து வளர்ந்த இந்த அம்மையார், அனைத்தையும் துறந்து காவி தரித்து பெண் துறவியாக வாழ்ந்து, இந்த கோலிலுக்கு பல திருப்பணிகளை செய்துள்ளார்.