உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தொடர்ச்சியாக 3 மெய்டன் ஓவர்களை வீசிய அணி என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றுள்ளது. இங்கிலாந்து பேட்டிங் செய்த 10 முதல் 12 ஓவர்கள் வரை நியூசிலாந்து அணி ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்கவில்லை. இந்த ஓவர்களை ஹென்றி மற்றும் கிராண்ட்ஹோம் வீசினர். 44 ஆண்டுகால உலகக்கோப்பை வரலாற்றில் வேறெந்த இறுதியாட்டத்திலும் இதுபோல் நடந்தது இல்லை.
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சேஸிங்கில் அதிக ரன்கள் எடுத்த ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இவர் 84 ரன்கள் எடுத்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக சேஸிங்கில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் இவர் நான்காம் இடத்தில் உள்ளார். முதல் 3 இடங்களை அரவிந்த டி சில்வா, கம்பீர் மற்றும் தோனி ஆகியோர் பிடித்துள்ளனர்.
2019 உலகக்கோப்பையில் தொடர்நாயகன் விருது நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு வழங்கப்பட்டது. 578 ரன்கள் அடித்ததுடன், அணியை சிறப்பாக வழிநடத்தியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதன்மூலம் சச்சினுக்குப் பிறகு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோற்ற அணியின் வீரர் தொடர் நாயகன் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சேஸிங் செய்து உலகக்கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை மொத்தம் 5 உலகக்கோப்பை இறுதிப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 3-ல் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வென்றுள்ளன. அதேபோல் 2019 தொடரில் நடந்த 4 லீக் ஆட்டங்களிலும் முதலில் ஆடியே அணிகளே வாகை சூடின. இதனால் முதலில் பேட் செய்யும் அணிக்கு சாதகமான மைதானம் என்ற எழுதப்படாத விதியை இங்கிலாந்து அணி நேற்று மாற்றியுள்ளது.
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அதிக வயதில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இங்கிலாந்தின் பிளங்கெட் படைத்துள்ளார். நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷமின் விக்கெட்டை வீழ்த்திய போது இவரது வயது 34 வருடம், 99 நாட்கள். முன்னதாக இங்கிலாந்தின் டெர்ரிக் பிரிங்கிள் அவரது வயது 33 வருடம் 189 நாட்களாக இருந்த போது இறுதிப் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.