உலகம் முழுவதும் உள்ள பல மில்லியன் கணக்கான யூசர்கள் பயன்படுத்தக்கூடிய தகவல் பரிமாற்ற செயலி தான் புலனம் எனப்படும் வாட்ஸ்அப். காலையில் எழுந்தவுடன் இரவு தூங்கும் வரை வாட்ஸ்அப் பார்க்காமல் நம்மால் இருக்க முடியாது. அந்தளவிற்கு மக்களிடத்தில் பிரபலமான ஒன்றாக இருப்பதோடு மக்களின் வாழ்க்கையில் ஒன்றிப்பிணைந்துள்ளது வாட்ஸ்அப். நண்பர்கள், அலுவலகம் மற்றும் உறவினர்களுக்கு எந்த தகவல்களை சொல்ல வேண்டும் என்றாலும் வாட்ஸ்அப் மெசேஜ் தான். இதோடு புகைப்படங்கள், வாட்ஸ்அப் ஸ்டேடட்ஸ் என தங்களுக்குப் பிடித்த விஷயங்களை மேற்கொள்கின்றனர் யூசர்கள்.
நாளுக்கு நாள் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மெட்டா நிறுவனம் தற்போது புதிய புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. முன்னதாக ஆரம்பத்தில் வாட்ஸ்அப் குழுவில் 256 நபர்கள் இணையமுடியும் என்ற எண்ணிக்கை 512 ஆக அதிகரித்தது. விரைவாக மெசேஜ்களுக்கு ரிப்ளே செய்ய ஈமோஜிகளை அனுப்புவது போன்றவை அப்டேட் செய்யப்பட்டது. இந்த வரிசையில் வாட்ஸ்அப் யூசர்களுக்காக புதிய பிரைவசி அம்சங்களை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இதுவரை டெக்ஸ்ட்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மட்டுமே வைக்கும் வசதி இருந்த நிலையில், இனி உங்கள் குரலை வைத்து வாய்ஸ்நோட்ஸையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் குரல் பதிவு : சமீபத்திய அறிக்கையின் படி, பீட்டா இப்போது குரல் குறிப்புகளை ஸ்டேட்டஸ் அப்டேட்களாகப் பகிரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆண்ட்ராய்டு 2.23.3.8 க்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டாவை நிறுவும் சில பீட்டா யூசர்கள் முதற்கட்டமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், விரைவில் அனைத்து யூசர்களுக்கும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என வாட்ஸ்அப்பைக் கண்காணிக்கும் வலைத்தளமான WABetaInfo தெரிவித்துள்ளது.
இந்த வசதியை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால், டைப்பிங் செய்யும் கீ- போர்டு அருகே இருக்கும் மைக்கை டேப் செய்து, குரல் பதிவுகளை ரெக்கார்டு செய்துக் கொள்ள வேண்டும். இதன் பின்னர் நீங்கள் ஸ்டேட்டஸாக அதை பகிர்ந்துக் கொள்ளலாம். தொடக்கத்தில் குரல் பதிவிற்கான அதிகபட்ச பதிவு நேரம் 30 வினாடிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் குரல் பதிவிற்கான நேரம் அதிகப்படுத்தப்படும் எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த குரல் பதிவு ஸ்டேட்ஸ்களை விரும்பிய நபர்களுக்கு பகிர்ந்துக் கொள்ளும் விதமாக தனியுரிமை அமைப்புகளைத் தேர்வு செய்யும் வசதியும் அளிக்கப்படும் எனவும், படங்கள் மற்றும் வீடியோக்களைப் போலவே , வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிரப்படும் குரல் பதிவுகளும் 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும் அம்சங்கள் உள்ளது.