இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயல்களில் முன்னணியில் இருக்கும் வாட்ஸ்அப் செயலியானது ஸ்மார்ட்ஃபோன்களில் ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் என இரண்டு இயங்குதலங்களிலும் இயங்கி வருகிறது.மேலும் தனிப்பட்ட எண்ட்-டு-எண்ட் எனப்படும் இரு நபர்களுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கான வசதியும் உள்ளது. இதே போலவே இந்த வருடம் முழுவதும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதிகள் அனைத்தையும் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்
புதிய பாதுகாப்பு வசதிகள் : இந்த ஆண்டு வாட்ஸ்அப்பில் சேர்க்கப்பட்ட அப்டேட்டில் முக்கிய வசதியாக இது எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு வரை உங்களது ஆன்லைன் ஸ்டேட்டஸை மற்றவர்களுக்கு மறைக்க முடியாது. ஆனால் இந்த வருடம் வாட்ஸ்அப் சேர்த்துள்ள இந்த புதிய வசதியின் மூலம் நீங்கள் ஆன்லைனில் இருந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட நபருக்கு நீங்கள் ஆன்லைனில் இருப்பதை மறைத்துக் கொள்ள முடியும்.
மேலும் வாட்சப் குழுக்களில் இருந்து நீங்கள் வெளியேற விரும்பினால் இதற்கு முன்பு வரை நீங்கள் வெளியேறி விட்டீர்கள் என்பதற்கான ஒரு சிறிய அறிவிப்பு ஒன்று நீங்கள் வெளியேறிய தருணத்தில் அந்த குழுவில் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அப்டேட்டின் மூலம் நீங்கள் யாருக்கும் தெரியாமல் குழுவில் இருந்து வெளியேற முடியும். அதற்கான அறிவிப்பானது அந்தக் குழுவின் அட்மினுக்கு மட்டுமே தெரிவிக்கப்படும்.
வாட்ஸ்அப் கம்யூனிட்டி : பல்வேறு குழுக்களுக்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட செய்தியை பரிமாற விரும்பினால் இதற்கு முன்பு வரை நீங்கள் ஒவ்வொரு குழுவையும் மார்க் செய்து, அதன் பிறகு அந்த செய்தியை அவர்களுக்கு அனுப்ப முடியும். ஆனால் இந்த ஆண்டு இறுதியில் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய கம்யூனிட்டி என்று அப்டேட்டின் மூலம் ஒரு யூசர் தன்னை ஒரு கம்யூனிட்டியில் இணைத்துக் கொள்ள முடியும். அவ்வாறு இணைத்துக் கொண்ட பிறகு குறிப்பிட்ட ஒரு செயலியை அந்த கம்யூனிட்டிக்கு அனுப்புவதன் மூலமாகவே அதில் உள்ள அனைத்து குழுக்களுக்கும் அந்த செய்தியை தெரிவிக்க முடியும். இதில் குறுஞ்செய்திகள், ஆடியோ, வீடியோ ஃபைல்ஸ் என அனைத்தும் அடக்கம்.
அதை தவிர வாக்கெடுப்பு நடத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழுவில் உள்ள உறுப்பினர்களின் விருப்பத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு எந்தவித வாக்கெடுப்பை வேண்டுமானாலும் நடத்த முடியும். மேலும் ஒரு வாட்ஸ் அப் குழுவில் 1024 நபர்கள் வரை இணைவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. இது முன்னர் இருந்ததை விட நான்கு மடங்கு அதிக எண்ணிக்கை ஆகும்.
வாட்ஸ்அப் அழைப்புகள் : இந்த வருடத்தில் வாட்ஸ்அப்பின் காலிங் செய்யும் வசதியும் பல்வேறு முன்னேற்றங்கள் செய்யப்பட்டன. மேலும் குழுவாக சேர்ந்து கால் பேசும் நிலையில், 32 நபர்கள் வரை ஒரே காலில் சேர்ந்து பேசுவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் குழுவாக பேசிக் கொண்டிருக்கும்போது, புதியதாக யாரேனும் காலில் இணைந்தாலும் அதற்கான அறிவிப்பும் திரையில் தோன்றும். வெளிநாடுகளில் இருப்பவருக்கு செய்யப்படும் ஆடியோ கால் மற்றும் வீடியோ கால் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய வசதிகள் : வாட்ஸ்அப்பில் தற்போது 2GBஅளவிலான ஃபைல்களை பகிர்ந்து கொள்ள முடியும். மிகப்பெரிய அளவிலான ஃபைல்களை அடிக்கடி பகிர்ந்து கொள்ளும் நபர்களுக்கு இது மிகவும் வசதியான அப்டேட் ஆக உள்ளது. இதைத்தவிர உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்து கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் யூசர்கள் இதனை ஒரு நோட்பேடு போன்று பயன்படுத்த முடியும்.
இதைத் தவிர கூடுதலாக பொழுதுபோக்கு அம்சமாக மெசேஜ்களுக்கு ரியாக்ட் செய்யும் எமோஜி வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட செய்திக்கு நீங்கள் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் எமோஜிகளை பயன்படுத்தலாம். கூடவே இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்று உங்களுக்கான 3d அவதாரை உருவாக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.