இப்போதெல்லாம் திருடர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு நடு ரோட்டில் நிற்பதில்லை. ஏதோ ஒரு ஏசி அறையில் அமர்ந்து கொண்டு ஏமாந்தவர்களின் வங்கிகணக்கை டிஜிட்டல் முறையில் ஹேக் செய்து பணத்தை ஈசியாக எடுத்துக்கொண்டு சென்றுவிடுகின்றனர்
இணையவாசிகளின் வங்கிக் கணக்குகளை காலி செய்ய சைபர் குற்றவாளிகள் எப்போதும் புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். இந்த முறை அவர்களின் பார்வை யூடியூப் பயனர்கள் மீது விழுந்துள்ளது.
யூடியூப் வீடியோ பார்த்தால் உங்கள் வங்கிகணக்கு ஹேக் செய்யபடும் என்றால் நம்புவீர்களா? அதுதான் உண்மை. ஆனால் கவனக்குறைவாக இருந்தால் மட்டுமே இப்படி நம் பணம் காணாமல் போகும். ஹேக்கர்கள் புத்திசாலித்தனமாக கணினி அல்லது செல்போனில் இருந்து முக்கியமான நிதி தரவுகளை திருடுகிறார்கள். யூடியூப் வீடியோக்களைப் பதிவேற்றுவது மற்றும் அவற்றில் குறிப்பிட்ட மால்வேர் இணைப்புகளை இணைப்பதன் மூலம் இது நடக்கிறது.
அதாவது, கம்யூட்டரை அல்லது செல்போனை ஹேக் செய்யும் மால்வேர் இணைப்புகளைக் கொண்ட யூடியூப் வீடியோக்கள் சமீப காலங்களில் அதிவேகமாக அதிகரித்துள்ளதை சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். AI இணைய-பாதுகாப்பு நிறுவனமான CloudSEK இன் ஆராய்ச்சியின்படி, சமீபத்திய காலங்களில் YouTubeல் மால்வேர் இணைப்பு கொண்ட வீடியோக்கள் 200 முதல் 300 மடங்கு அதிகரித்துள்ளன.
Infostealer என்று அழைக்கப்படும் இந்த மால்வேர், போலி இணையதளங்கள், பதிவிறக்கங்கள் மற்றும் யூடியூப் டுடோரியல்கள் மூலம் பயனர்களின் கணினிகளுக்குள் நுழைகிறது. இது பயனரின் வங்கிக் கணக்கை காலி செய்யும். தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யூடியூப் வீடியோக்களுக்குப் பழகிவிட்டனர். வேறு எந்த வீடியோ பிளாட்ஃபார்மிலும் இல்லாத வகையில் இது ஒரு பயனர் தளத்தைக் கொண்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அதனால்தான் சைபர் குற்றவாளிகள் யூடியூப் பயனர்களை குறிவைத்து வருகின்றனர். சைபர் கிரைமினல்கள் அதிகமான மக்களை சிக்க வைக்க AIமூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களைப் பயன்படுத்துகின்றனர்.
நாம் பல வகையான சாப்ட்வேர்ஸ்களை யூஸ் செய்கிறோம். படம் டவுன்லோடு செய்வது முதல் போட்டாஷாக் வரை நிறைய சாப்ட்வேரை கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்வோம். ஒரு மாதம் இலவசம் வரை பயன்படுத்திவிட்டு, இலவசமாக எதாவது கிராக்டு வெர்ஷன் கிடைக்குமா என தேடுவோம். அப்படி இலவசத்தை தேடி யூடியூப் செல்பவர்களை வலை விரித்து பிடித்து விடுகின்றனர் இந்த ஹேக்கர்கள். அவர்களின் வீடியோக்கள் நம்பும்படியாக நச்சென இருக்கும். கீழே இருக்கு லிங்க் எனவும் கொடுக்கிறார்கள். அதனை க்ளிக் செய்து ஆசையாக நீங்கள் சென்றால் உங்கள் பணம் காலிதான்.
இவை AI ஜெனரேட்டர் வீடியோக்கள். எனவே அந்த வீடியோக்களை அடையாளம் காண்பது அல்லது அகற்றுவது கடினமாகிறது. நவம்பர் 2022 முதல் YouTube வீடியோக்களில் Vidar, RedLine, Raccoon போன்ற Infostealer பல மால்வேர்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த மால்வேர் கிரெடிட் கார்டு விவரங்கள், வங்கி கணக்கு எண்கள், கடவுச்சொற்கள் போன்ற முக்கியமான தகவல்களை திருடுகிறது. தேவையில்லாத சாப்ட்வேர்களை யூடியூப் வீடியோக்கள் பார்த்து இன்ஸ்டால் செய்வது, வழக்கமான பழக்கமற்ற புது யூடியூப் வீடியோக்களை நம்பி எந்த ஒரு லிங்கையும் க்ளிக் செய்யாமல் இருப்பதே இதில் இருந்து தப்பிக்க சிறந்த வழி.