ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்குப் பிறகு நாட்டின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக வோடபோன் ஐடியா இருந்து வருகிறது. இருப்பினும் சமீபகாலமாக அந்த நிறுவனத்தின் நிதி நிலை மோசமாக உள்ளது. இண்டஸ் டவர்ஸ் போன்ற டவர் நிறுவனங்களுக்கும் எரிக்சன் மற்றும் நோக்கியா போன்ற நெட்வொர்க் உபகரண தயாரிப்பாளர்களுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை பாக்கியை செலுத்த வேண்டிய நிலையில் வோடஃபோன் ஐடியா இருந்து வருகிறது.
இந்நிலையில் கட்டண நிலுவையும், நிதிப் பற்றாக்குறையையும் சமாளிக்க முடியாத வோடஃபோன் அடுத்தடுத்து மாட்டிக்கொண்ட நிலையில் தற்போது 2 லட்சம் கோடிக்கு மேல் கடனில் சிக்கித் தவித்து வருகிறது. வோடபோன் நிறுவனம் கடனை திரும்ப அடைப்பதற்கு ரூ. 30,000 கோடி முதல் ரூ.40,000 கோடி நிதி திரட்ட திட்டமிட்டு வருவதாகவும், இந்த நிலையில் வங்கிகளிடம் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தனது கட்டண நிலுவைக்காக அரசுக்கு வோடபோன் ஐடியா பங்குகளைக் கொடுக்கும் அளவிற்கு வந்துள்ளது. ரூபாய் 16,000 கோடி மதிப்பிலான AGR நிலுவை தொகைக்கான வட்டிக்கு வோடபோன் பங்குகளைப் பெற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மூலம், நஷ்டத்தில் இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் 33.14 % பங்குகளுடன் மத்திய அரசு தனிப்பெரும் பங்குதாரராக மாறியுள்ளது.
மத்திய அரசு ஒப்புதலை தொடர்ந்து ஈக்விட்டி பங்குகளாக மாற்றப்பட வேண்டிய மொத்தத் தொகை 16,133 கோடி ரூபாயாகும். இதற்கு 10 ரூபாய் மதிப்புள்ள 1613.31 கோடி ஈக்விட்டி பங்குகளை ரூ.10 வெளியீட்டு விலையில் வெளியிடுமாறு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது கடனில் இருந்து விடுபடவும், நிறுவனத்தை நடத்துவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்பதற்கும் உதவும் என்றும் வோடபோன் ஐடியா நிறுவனம் எதிர்பார்க்கிறது.
கடும் போட்டிகள் மத்தியில், கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் வோடபோன் நிறுவனம், தொடர்ந்து பல வழிகளில் நிதி திரட்ட முயற்சித்து வருகின்றது. ஆனால் எந்த முயற்சியும் கைகொடுத்ததாக தெரியவில்லை. மத்திய அரசுக்கு பங்கு ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்த பிறகு வோடபோன் ஐடியா பங்கின் விலை சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.