சமீபத்தில், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் வாய்ஸ் ஸ்கேம் என்று கூறப்படும் குரல்களை பயன்படுத்தி ஏகப்பட்ட ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு அச்சுஅசல் ஒரு நபரை போலவே இருக்கும் புகைப்படங்களை உருவாக்கி, அவை சமூக வலைத்தளங்களில் வைரலாக அவ்வப்போது பகிரப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் உலகத்திலேயே இல்லாத நபர்களின் தோற்றத்தையும் உருவத்தையும் உருவாக்கி உயிருடன் ஒரு நபர் உலாவிக் கொண்டிருப்பது போலவே செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய படங்களும் உலகம் முழுவதும் டிரெண்டானது.
ஏற்கனவே எது அசல் எது போலி என்று பிரித்துப் பார்க்க முடியாத ஏஐ செய்யும் வேலைகள் கச்சிதமாகவும் துல்லியமாகவும் இருக்கின்றது. இதில், குரலும் விதிவிலக்கல்ல, எது உண்மை குரல், எது க்ளோனிங் செய்யப்பட்ட போலியான குரல் என்பது கண்டறிய முடியவில்லை. இவ்வாறு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி போலியான குரல் மூலம் கணிசமான எண்ணிக்கையில் பலரும் ஏமாந்துள்ளனர் என்று சமீபத்தில் ஒரு மெக்அஃபி நிறுவனத்தின் அறிக்கை வெளியாகி இருக்கின்றது இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் கிட்டத்தட்ட 47 சதவீதத்தினர் செயற்கை நுண்ணறிவு குரல் மோசடிக்கு ஆளாகியுள்ளனர் மற்றும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் ஒப்பிடும் பொழுது, இது இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் 83 சதவிகித இந்தியர்கள் குரல் மோசடிகளால் பணத்தை இழந்துள்ளனர். இதில் குறிப்பாக கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தினர் ₹50,000 க்கு மேல் இழந்துள்ளனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து கணிப்பு மட்டுமே நடத்தாமல், குரல் மோசடிகள் எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை பற்றி புரிந்துகொள்ளவும் நிறுவனம் முயற்சி செய்தது. அதன் அடிப்படையில் மெக்அஃபி நிறுவனம் வெளியிட்ட விவரங்கள் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது. தற்போது பல செயற்கை நுண்ணறிவு வாய்ஸ் கருவிகள் இருக்கின்றன. இவற்றுக்கு நபரின் உடலை க்ளோன் செய்வதற்கு, ஒரு நபரின் மூன்று வினாடி ஆடியோ மட்டும் போதும். இந்தக் கருவியால் அவருடைய குரலை எளிதாக க்ளோன் செய்து விட முடியும். இது எந்த அளவுக்கு துல்லியமாக இருக்கிறது என்றால் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட இந்திய பங்கேற்பாளர்களில் 69 சதவிகிதத்தினர், எது கருவியின் குரல், இது மனிதரின் குரல் என்பதை கண்டறிய முடியவில்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
குரல் மோசடி என்பது மொபைல் அழைப்புகள் மூலமாகத்தான் பெரும்பாலும் நடக்கும். எனவே பங்கேற்பாளர்கள் பெரும்பாலும் தங்கள் பெற்றோர் கணவன் அல்லது மனைவி அல்லது குழந்தைகள் அல்லது நெருங்கிய உறவினர், நண்பர்கள் உள்ளிட்டவர்களிடம் வரும் அழைப்பின் மூலமாகத்தான் ஏமாந்திருக்கிறார்கள். அதாவது தனது மிகவும் தெரிந்தவர்கள் அழைக்கிறார்கள் என்ற நிலையில் ஏமாற்றுப் பேர்வழிகள் ai உருவாக்கிய போலியான குரலில் திருட்டு போனதாக, விபத்தில் சிக்கிக்கொண்டதாக, ஃபோன் அல்லது பர்ஸ் தொலைந்துவிட்டதாக கூறி ஏமாற்றி இருக்கின்றனர். இதில் ஒரு சிலர் வெளிநாட்டு பயணத்திற்காக பண உதவி தேவை என்று ஏமாற்றியுள்ளனர்.