கடந்த வருடம் இறுதியில் இருந்து உலகளவில் மிகப்பெரும் பேசு பொருளாகி வரும் ஒன்றுதான் சாட்ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு. இதன் வருகைக்குப் பின்னர் செயற்கை நுண்ணறிவு பற்றிய ஆதரவும் எதிர்ப்பும் உலக அளவில் அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இதனால் மிகப்பெரிய நன்மைகள் கிடைத்தாலும் சில பெரு நிறுவனங்கள் கூட இந்த செயற்கை நுண்ணறிவை கண்டு அஞ்சுகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
சாம்சங் நிறுவனமானது தனது அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் சாட் ஜிபிடி என்னும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதை தடை செய்துள்ளது. அலுவலக கணினிகள், டேப்லெட், போன் போன்ற அனைத்திலும் சாட் ஜிபிடி பயன்படுத்துவதை சாம்சங் பணியாளர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் நெட்வொர்க்கிற்குள் இயங்கும் தனிப்பட்ட டிவைஸ்களிலும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் சில முக்கிய தகவல்கள் சாட் ஜிபிடி மூலம் கசிந்ததால் அந்நிறுவனம் உடனடியாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. சாட் ஜிபிடி மட்டுமின்றி இதர செயற்கை நுண்ணறிவுகளான மைக்ரோசாப்ட் பிங் மற்றும் கூகுள் பார்டு ஆகியவையும் சாம்சங் நிறுவனத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் தற்போது உலக அளவில் பேசு பொருளாகியுள்ள இந்த செயற்கை நுண்ணறிவுகள் நன்மை செய்வதாக இருந்தாலும், அவற்றினால் சில கெடுதல்கள் ஏற்படுவதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. இவற்றை பயன்டுத்தும் போது யூசர்களிடமிருந்து சில தகவல்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் கடத்தப்படுகின்றன.
கூகுள் பார்டு மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவற்றிற்கும் இதே நிலைமைதான். இந்த தகவல்கள் வெளிப்புற சர்வர்களில் சேமிக்கப்படுவதால் அவற்றை கண்டறிவதும் அழிப்பதும் முடியாத காரியமாக உள்ளது. நிறுவனத்தின் சில ரகசியங்கள் மூன்றாம் தரப்பினருக்கு கிடைப்பதை தடை செய்யும் நோக்கிலேயே இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்காக சமீபத்தில் சாம்சங் நிறுவனமானது தனது அனைத்து பணியாளர்களுக்கும் அறிவிப்பு ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவுகளை பயன்படுத்துவதற்கான தடைகளை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் இந்த புதிய கொள்கையானது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் ஹார்ட்வேர்களுக்கு பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சாம்சங் பணியாளர்கள் அனைவரும் இந்த நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் எனவும், பின்பற்ற தவறும் பட்சத்தில் நிறுவனத்தின் ஒழுங்கு முறைகளை மீறிய குற்றத்திற்காக பணிநீக்கம் செய்யப்படலாம் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.