சாட்ஜிபிடி (ChatGPT) என்கிற செயற்கை நுண்ணறிவு தளம் தான் சில மாதங்களாக இணையவாசிகளின் ட்ரெண்டிங் தலைப்பாக இருந்து வருகிறது.இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை இந்த சாட்ஜிபிடி தளத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இதன் ஆதிக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதேபோன்று, மிக குறைந்த நாட்களிலேயே பல சந்தாதாரர்களை இந்த தளம் பெற்றுவிட்டது. இந்த சாட்ஜிபிடி தளத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளது.
இதில் கேட்கப்படும் வெவ்வேறு விதமான கேள்விகளுக்கும் இந்த தளம் மிக சிறப்பாக பதில் கூறி வருகிறது. இப்படி பல சிறப்புகள் சாட்ஜிபிடியில் இருந்தாலும் சில சமயங்களில் இது சொதப்பவும் செய்கிறது. இப்படியொரு சம்பவம் தான் டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடந்துள்ளது. டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், தனது மாணவர்கள் சமர்ப்பித்த கட்டுரைகள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவால் எழுதப்பட்டவை என்று சாட்ஜிபிடி தளம் தவறாக கூறியதால், அவர் தனது முழு வகுப்பில் உள்ள மாணவர்களையும் ஃபெயில் ஆக்கியுள்ளார்.
மாணவர்கள் உண்மையிலேயே சொந்தமாகத்தான் தனது கட்டுரைகளை எழுதி உள்ளார்களா என்பதை சோதிக்க இந்த பேராசிரியர் மாணவர்களில் கட்டுரைகளை சாட்ஜிபிடி தளத்தில் உள்ளீடாக கொடுத்து, இவை இணையத்தில் திருடப்பட்டவையா என்று கேட்டுள்ளார். அதற்கு, அந்த கட்டுரைகள் கணினியால் எழுதப்பட்டதற்கான என்கிற அதிக நிகழ்தகவை சாட்ஜிபிடி வழங்கியது. இதை பார்த்த பேராசிரியர், கட்டுரைகள் சொந்தமாக எழுதப்பட்டவை அல்ல என்பதை நம்பி, வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஃபெயில் ஆக்கியுள்ளார். இந்த சாட்ஜிபிடி என்பது ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய மொழி மாதிரியான சாட்போட் ஆகும்.
இதை பயன்படுத்தி நீங்கள் உரையை உருவாக்கலாம், மொழி பெயர்த்து கொள்ளலாம், பல்வேறு வகையான ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை எழுதலாம் மற்றும் உங்கள் கேள்விகளுக்கு தகவல் தரும் வகையில் இதில் இருந்து பதில்களை பெறலாம். இவ்வளவு சிறப்பம்சம் கொண்ட இந்த தளம் தான் தற்போது ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களில் கட்டுரைகளை காபி செய்த கட்டுரைகள் (plagiarism) என்று வகைப்படுத்தி உள்ளது. இந்த நிகழ்விற்கு பிறகு மாணவர்கள் இதுகுறித்து புகார் தெரிவித்த நிலையில், சாட்ஜிபிடி தவறாக கூறியுள்ளது என்று தெரியவந்துள்ளது.
மேலும், அந்த கட்டுரைகள் கணினியால் எழுதப்படவில்லை என்றும், அவை மாணவர்களால் எழுதப்பட்டன என்றும் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட பேராசிரியர், அவர்களுக்கு தேர்வெழுத இரண்டாவது வாய்ப்பு வழங்க சம்மதித்துள்ளார். திருட்டுத்தனத்தைக் கண்டறிய ஏஐ கருவிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. ஏஐ கருவிகள் எல்லா நேரங்களிலும் சரியானவை அல்ல மேலும் சில நேரங்களில் தவறுகள் செய்ய வாய்ப்புகள் உண்டு. மேலும், ஏஐ கருவிகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்துவதும் அவற்றின் வரம்புகளை அறிந்திருப்பதும் முக்கியம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.