கொரோனா காலத்திற்கு முன்பு ஆன்லைன் வகுப்பு என்பது மிக அபூர்வம், ஆனால் கொரோனா பெருந்தெற்றுக்குப் பிறகு ஆன்லைன் வகுப்பு அத்தியாவசியம் ஆகிவிட்டது. இதனால் நோட்டும் பேனாவுமாக திரிந்த மாணவர்கள் இப்போது மொபைலும் லேப்டாப்புமாக அலைகிறார்கள். பிள்ளைகளின் கல்விக்காக விலை உயர்ந்த ஆண்ராய்டு மொபைலும், லேப்டாப்பும் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள் பெற்றோர்கள். வசதி படைத்தவர்களுக்கு இந்த செலவு பெரிய விஷயமில்லை. ஆனால் வசதி குறைந்த பெற்றோர்கள் பாடு திண்டாட்டம்தான். அவர்களுக்கு வரப்பிசாதமாகத்தான் வருகிறது மலிவு விலை லேப்டாப்
பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும் தடையில்லா கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு டெல்லி ஐஐடியின் முன்னாள் மாணவர்கள் அமன் வெர்மா மற்றும் சித்ரான்சு மகந்த் ஆகியோர் இந்த லேப்டாப்பை உருவாக்கியிருக்கிறார்கள். மாணவர்களின் இந்த மலிவு விலை ஆண்ட்ராய்டு லேப்டாப் ஐடியா பிரபல தொலைக்காட்சியின் ஷார்க் டேங்க் இந்தியா என்னும் ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் வெளியானது. இதையடுத்து லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் சிஇஓ பியூஸ் பன்ஸால் 75 லட்சம் முதலீடு செய்ய முன்வந்தார்.
இதையடுத்து இந்த மலிவு விலை ஆண்டராய்டு லேப்டாப் நனவாகியுள்ளது. 16,990 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த லேப்டாப் வரும் 11ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட் ரூ. 14,990-க்கு தள்ளுபடி விலையில் இந்த லேப்டாப்பை விற்பனை செய்ய உள்ளது. மேலும் நோ காஸ்ட் இஎம்ஐ மூலமும் இந்த லேப்டாப்பை வாங்கிக் கொள்ளலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இனி இந்த லேப்டாப் தொடர்பான ஃபியூச்சர்கள் என்னென்ன என பார்க்கலாம்.
ப்ரைம்புக் 4ஜி லேப்டாப் எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த லேப்டாப், 11.6 இன்ச் 720p HD IPS டிஸ்பிலே மற்றும் தொடுவதற்கு மிருதுவான மூடியையும், பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட வெளிப்புறத்தையும் கொண்டுள்ளது. மீடியாட்டிக் எம்டி8788 சிப்செட் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆண்ட்ராய்டு ப்ரைம்புக் 4ஜி லேப்டாப், 4ஜிபி RAM மற்றும் 64 ஜிபி ஸ்டோரஜூடன் உருவாக்கப்பட்டுள்ளது. மைக்ரோஎஸ்டி கார்டை பயன்படுத்தி சுமார் 128 ஜிபி வரை இந்த லேப்டாப்பின் ஸ்டோரேஜை விரிவுபடுத்திக் கொள்ளவும் முடியும்.
ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் ப்ராஜெக்ட் கொண்டு உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு 11 தளத்தில் இயங்கும் ப்ரைம்புக் 4ஜி லேப்டாப்பில் ஸ்மார்ட் போனை போல எங்கு வேண்டுமானாலும் இணைய வசதியை பயன்படுத்தவும், அழைப்புகளை செய்து கொள்ளவும் வசதியாக பிரத்தியேகமான சிம்கார்டு ஸ்லாட்டும் உள்ளது.
இத்துடன் சேர்த்து இந்த ப்ரைம்புக் 4ஜி லேப்டாப்பில் வை-ஃபை, ப்ளூடூத் 5.0 மற்றும் 2 எம்பி வெப் கேமராவும் உள்ளது.
மேலும் டவுன்வார்ட் ஃபயரிங் ஸ்பீக்கர்கள், இரண்டு மைக்ரோஃபோன்கள், இரண்டு யூஎஸ்பி போர்ட்கள், ஒரு மினி ஹச்டிஎம்ஐ போர்ட் ஆகியவையும் இந்த லேப்டாப்பில் உள்ளன. கருப்பு மற்றும் நீலம் என இரண்டு நிறங்களில் இந்த லேப்டாப் கிடைக்கும். நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உண்மையிலேயே இது ஒரு வரப்பிரசாதம்தான்.