இந்தியாவின் செல்போன் கதையை எழுதினால் அதில் முகப்பிலேயே எழுதப்பட வேண்டிய பெயர் நோக்கியா. செல்போன் சேவை இந்தியாவில் அறிமுகமானபோது அனைவருக்கும் செல்போன் என்றால் அது நோக்கியாதான். ஆனால் காலப் போக்கில் பல்வேறு புதிய போன்கள் அறிமுகமானபோது, அவற்றுடன் தொழில்நுட்ப ரீதியாக போட்டி போட முடியாமல் நோக்கியா கிட்டத்தட்ட வழக்கொழிந்து போனது என்றே சொல்லலாம்.
ஆனால் சோர்ந்து போகாமல், மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது நோக்கியா. அண்மைக் காலமாக புதிய, மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் தனது புராடக்ட்களை அறிமுகம் செய்து வருகிறது . அதன் வரிசையில் அடுத்ததாக புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது நோக்கியா நிறுவனம். மேஜிக் பாக்ஸ் என செல்லப் பெயரிடப்பட்ட சி 99 புதிய போனில் உள்ள சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம்.
நோக்கியா சி99 ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் அளவிலான எல்டிபிஓ அமோஎல்இடி (LTPO AMOLED) டிஸ்பிளே, குவால்காமின் லேட்டஸ்ட் ஹை-எண்ட் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸர், 144 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் 180W ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் சி-99 போனில் இருக்கிறது. நோக்கியா சி99 ஸ்மார்ட்போனில் உள்ள லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் சிப்செட் ஆனது 16ஜிபி வரையில் ரேம்-ஐ எக்ஸ்டென் செய்து கொள்ளலாம்.
இதன் 6.7-இன்ச் டிஸ்பிளேவானது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டிற்கான ஆதரவு மற்றும் கொரில்லா கிளாஸ் 7 ப்ரொடெக்ஷன் உடன் இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் 144எம்பி மெயின் கேமராவுடன் 64எம்பி அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 48எம்பி டெலிஃபோட்டோ கேமராவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ட்விட்டரில் லீக் ஆன ஒரு தகவலின்படி நோக்கியா சி-99 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் சுமார் 45ஆயிரம் ரூபாயாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. உண்மையிலேயே இந்த விலை கொஞ்சம் நம்ப முடியாத ஒன்றுதான்.
ஏனென்றால் நோக்கியா சி99-இல் உள்ள அம்சங்கள் அப்படி! இந்தியாவில் சி-99 போனை தயாரிக்கும் உரிமத்தை பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த தகவல்களை உறுதி செய்யவில்லை. ஆனாலும், இணையத்தில் இந்த தகவல்கள் பரவி வருகின்றன. இவ்வளவு குறைந்த விலைக்கு இத்தனை அம்சங்கள் நிறைந்த போன் என்பதால் நோக்கியா - ச99 போன் எப்போது அறிமுகமாகும் எனக் காத்துக் கிடக்கிறார்கள்.