பிரபல ஸ்ட்ரீமிங் தளமான, நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டு பரிமாற்றம் தொடர்பாக புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்காக அதன் Help Center பக்கத்தை அந்நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. இதனால் இனி ஒரு நெட்பிளிக்ஸ் கணக்கை ஒரு வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும். இது குறித்து நெட்பிளிக்ஸின் புதிய இணை தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) கிரெக் பீட்டர்ஸ் மற்றும் டெட் சாண்டோஸ் ஆகியோர் ப்ளூபெர்க் ஊடக நிறுவனத்திற்கு அளித்த ஒரு நேர்காணலில், அடுத்த மாதத்திற்குள் இந்த புதிய அப்டேட் அனைத்து பயனர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்பதை தெரிவித்துள்ளனர். அந்த புதிய அப்டேட் என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
நெட்பிளிக்ஸ், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் கேடோஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஊடக சேவை மற்றும் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த தளத்தில், புதிதாக ரிலீஸ் செய்யப்படும் வெப் சீரிஸ்கள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகின்றன. இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டு பரிமாற்றம் தொடர்பாக புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்காக அதன் Help Center பக்கத்தை அந்நிறுவனம் மேம்படுத்தியுள்ளது.
இதனால் இனி ஒரு நெட்பிளிக்ஸ் கணக்கை ஒரு வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும். இந்த புதிய அப்டேட் வருவதற்கு முக்கிய காரணம் நெட்பிளிக்ஸ் பயன்படுத்தும் பலர் அவர்களின் பாஸ்வேர்டு விவரங்களை, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்து, ஒரே கணக்கை பலர் பயன்படுத்தி வந்ததுதான். இதனால் இந்த நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் பிறகும்கூட உங்களால் நெட்பிளிக்ஸ் கணக்கின் பாஸ்வேர்டு விவரங்களை பகிரமுடியும். ஆனால் அது உங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே மட்டும்தான் பகிரமுடியும். இதற்காக நீங்கள் இருக்கும் இடத்தின் wifi Location-ஐ On செய்து நெட்பிளிக்ஸ் ஆப் மூலம் மாதம் ஒருமுறையாவது திரைப்படங்களை பார்க்கவேண்டும். மேலும் நெட்பிளிக்ஸ் கணக்கின் பாஸ்வேர்டு விவரங்களை, குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுடன் பகிர கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும்.
வீட்டில் இல்லாமல் வேறு எங்காவது பயணம் மேற்கொள்ளும்போது ஒரு சாதனத்தில் நெட்பிளிக்ஸ் பயன்படுத்தினால், அதற்காக தற்காலிகமாக Log in Code ஒன்று வழங்கப்படும். இது code-ஐ பயன்படுத்தி 7 நாட்களுக்கு நாம் அதனை பயன்படுத்த முடியும். ஃப்ரீலோடிங் செய்யும் பயனர்கள், விருப்பத்தேர்வுகள், விருப்பு வெறுப்புகள் மற்றும் பிற தனிப்பட்ட தரவை இழக்காமல் புதிய கணக்கிற்கு தங்கள் சுயவிவரங்களை மாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெட்பிளிக்ஸ் அதன் 'கிட்ஸ் மிஸ்டரி பாக்ஸ்' அம்சத்தை ஆண்ட்ராய்டு சாதனங்களில் உலகளவில் வெளியிட்டுள்ளது. அதில் குழந்தைகள் வேறு வீடியோக்களுக்கு செல்லாமல் நேரடியாக குழந்தைகள் விரும்பி பார்க்கும் கார்ட்டூன் மற்றும் குழந்தை திரைப்படங்கள் மட்டுமே காண முடியும். இனி பெற்றோர்கள் கவலை இல்லாமல் குழந்தைகளை அவர்களுக்கு விரும்பிய கார்ட்டூன் மற்றும் திரைப்படங்களை காண அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.