நெட்வொர்க் சந்தையில் ஜியோ என்ட்ரியான பிறகு, நாட்டின் தொலைத்தொடர்பு துறை புதிய பரிமாணத்தை எட்டியது எனலாம். ஆண்டுதோறும் புதிய அறிவிப்புகள் மூலம் வாடிக்கையாளர்களை தன்வசபடுத்தி, ஜியோவின் மார்க்கெட்டை விரிவுபடுத்தி வரும் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ஆண்டும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 5 ஜி நெட்வொர்க்கை நோக்கி உலகம் நகர்ந்து வரும் சூழலில் இந்தியாவில் சுமார் 300 மில்லியன் பேர் இன்னும் 2 ஜி நெட்வொர்கை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
அதிலும், பெரும்பாலானோர் ஒரு நிமிட அழைப்புகளுக்கு 1 ரூபாய் முதல் 1.50 ரூபாய் வரை செலவிட்டு வருகின்றனர். அந்த வாடிக்கையாளர்களை குறிவைத்துள்ள ஜியோ, 2 ஜி முக்தி பாரத் (‘2G-mukt Bharat) என்ற திட்டத்தை மேம்படுத்தியுள்ளது. அதாவது 2ஜிக்கு முற்றுப்புள்ளி வைத்து 4ஜிக்கு மாறுவதற்கான வாய்ப்பை ஜியோ வழங்குகிறது. அதன்படி, ஜியோ 2021 ஆஃபர்கள் மக்களை எளிதில் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஜியோவின் 1,999 ரூபாய் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி நெட்வொர்க் ஸ்பீடு கொண்ட இலவச போன் மற்றும் 2 ஆண்டுக்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படுகிறது. அத்துடன், அன்லிமிட்டெட் அழைப்புகளையும் மேற்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் ரீச்சார்ஜ் செய்யத் தேவையில்லை என்பதால், ஏழை மக்களை இந்த திட்டம் மிகவும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1,499 ரூபாய் திட்டத்தை தேர்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் இலவச மொபைலுடன், 1999 ரூபாய் திட்டத்தில் கொடுக்கப்படுகிற அனைத்து சலுகைகளும் இந்த திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. ஒரே வித்தியாசம் என்னவென்றால் இந்த திட்டத்தில் அனைத்து சலுகைகளையும் ஒரு ஆண்டுக்கு மட்டுமே வாடிக்கையாளர்கள் பெற முடியும். மேலும், ஏற்கனவே ஜியோ மொபைலை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும், புதிய ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1999 ரூபாய் திட்டத்தில் கிடைக்கும் அன்லிமிட்டெட் அழைப்பு, இலவச அழைப்புகள் மற்றும் டேட்டா வசதிகளை 749 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்து ஒரு வருடத்திற்கு பெற்றுக்கொள்ளலாம்.
ஜியோ நிறுவனத்தால் 2000 ரூபாய்க்கு வழங்கும் சலுகைகளை மற்ற நிறுவனங்கள் 5000 ரூபாய்க்கு கொடுப்பதாக ஜியோ தெரிவித்துள்ளது. அதாவது, சாதாரண மொபைல் 1200 - 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அவர் மாதம் 149 ரூபாய் என ரீச்சார்ஜ் செய்தால் வருடத்திற்கு 3600 ரூபாயை செலவழிக்க வேண்டியிருக்கும். இவற்றை சேர்க்கும்போது கிட்டதட்ட 5000 ரூபாயை வாடிக்கையாளர் செலவழிக்க வேண்டியிருக்கும் நிலையில், ஜியோவின் சேவைகள் 2000 ரூபாயில் கிடைப்பதாக அந்நிறுவனம் விளக்கியுள்ளது.